ரூ.26 லட்சம் செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
கரூர் மாவட்டத்தில் காணாமல்போன ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பொதுமக்கள் புகார்
கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று மீட்கப்பட்ட செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கரூர் மாவட்டத்தில் செல்போன்கள் தொலைந்துபோனது சம்பந்தமாக பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் மற்றும் செல்போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலும் விசாரணை நடைபெற்றது. இதில் கரூர் மாவட்ட சைபர் கிரைம் போலீசாரால் செல்போன்கள் மற்றும் பணம் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டது.
131 செல்போன்கள்
இதனையடுத்து மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமைதாங்கி ரூ.26 லட்சம் மதிப்புள்ள 131 செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார். மேலும் பொதுமக்கள் செல்போனில் வரும் லிங்க், யூடியூப் விளம்பரம் மற்றும் ஆன்லைன் மூலம் பொருட்கள் வாங்க பணம் அனுப்பி ஏமாந்தவர்களின் பணம் ரூ.2 லட்சத்து 46 ஆயிரத்து 100-ம் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், போலீசார் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.