வாலிபருக்கு கல்வி சான்று ஒப்படைப்பு; நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை
வாலிபருக்கு கல்வி சான்று வழங்க நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டு நடவடிக்கை மேற்கொண்டது.
நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள தென்கலம் நல்லம்மாள்புரம் கீழத்தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருடைய மகன் மணிகண்டன். இவர் நெல்லை நிரந்தர மக்கள் கோர்ட்டில் ஒரு வழக்கு தொடர்ந்தார்.
அதில், நான் நெல்லை அருகே உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் டி.எம்.இ. டிப்ளமோ படித்து முடித்தேன். அதன்பிறகு மேல் படிப்புக்கு முயற்சி செய்த போது பேராசிரியர் ஒருவர் எனது அனைத்து அசல் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டு, ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. படிக்க சேர்த்து விடுவதாக கூறினார்.
அதன் பிறகு கொரோனா காலம் என்பதால் கல்லூரியில் சேர்ந்து படிக்கவில்லை. தற்போது கல்லூரி நிர்வாகத்திடம் சென்று அசல் மதிப்பெண் சான்றிதழ்களை கேட்ட போது ஆண்டுக்கு ரூ.85 ஆயிரம் வீதம், 3 ஆண்டுகளுக்கு ரூ.2.55 லட்சம் தரவேண்டும் என்று கூறினார்கள். ஒரு நாள் கூட கல்லூரிக்கு வராததால் பணம் தராமல், சான்றிதழ் தரமறுக்கிறார்கள். சான்றிதழை பெற்றுத்தர வேண்டும்'' என்று கூறிஇருந்தார். இதுதொடர்பாக நிரந்தர மக்கள் கோர்ட்டு நீதிபதி சமீனா, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சம்மன் அனுப்பி விசாரித்தார். நேற்றைய விசாரணையின் போது கல்லூரி மக்கள் தொடர்பு அலுவலர், அசல் சான்றிதழ்களை கோர்ட்டில் சமர்ப்பித்தார். அந்த சான்றிதழ்களை மணிகண்டனிடம், நீதிபதி சமீனா வழங்கினார்.