விசாரணைக்கு முழு ஒத்துைழப்பு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கேரள உறவினரிடம் குருத்திகா ஒப்படைப்பு - கீழ்கோர்ட்டை அணுக காதல் கணவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை


விசாரணைக்கு முழு ஒத்துைழப்பு தர வேண்டும் என்ற நிபந்தனையுடன் கேரள உறவினரிடம் குருத்திகா ஒப்படைப்பு - கீழ்கோர்ட்டை அணுக காதல் கணவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை
x

தென்காசி காதல் திருமண விவகாரத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற ஐகோர்ட்டின் நிபந்தனையின்பேரில் கேரள உறவினரிடம் இளம்பெண் குருத்திகா ஒப்படைக்கப்பட்டார். கீழ்கோர்ட்டை அணுக அவரின் காதல் கணவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியது.

மதுரை


தென்காசி காதல் திருமண விவகாரத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும் என்ற ஐகோர்ட்டின் நிபந்தனையின்பேரில் கேரள உறவினரிடம் இளம்பெண் குருத்திகா ஒப்படைக்கப்பட்டார். கீழ்கோர்ட்டை அணுக அவரின் காதல் கணவருக்கு மதுரை ஐகோர்ட்டு அறிவுரை வழங்கியது.

காதல் திருமண விவகாரம்

தென்காசி மாவட்டம் கொட்டாகுளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் வினித். இவரும், அதே பகுதியை சேர்ந்த நவீன் படேல் மகள் குருத்திகாவும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

சமீபத்தில் அவர்கள் இருவரும் வினித்தின் உறவினர்கள் முன்னிலையில் நாகர்கோவிலில் திருமணம் செய்துள்ளனர்.

இதுகுறித்து நவீன் படேல் குற்றாலம் போலீசில் புகார் அளித்தார். அதுசம்பந்தமான விசாரணைக்கு ஆஜராகிவிட்டு சென்றபோது, வினித்தை தாக்கி, குருத்திகாவை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கடத்தி சென்றதாக போலீசார் வழக்குபதிவு செய்தனர்.

வாக்குமூலம்

இதற்கிடையே தனது மனைவியை மீட்டு ஆஜர்படுத்தக்கோரி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று வினித் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின்போது, கடந்த 7-ந்தேதி குருத்திகாவை போலீசார் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதிகள், அவரை காப்பகத்தில் தங்க வைத்து வாக்குமூலம் பெறும்படி உத்தரவிட்டனர். அதன்பேரில் குருத்திகாவை செங்கோட்டை மாஜிஸ்திரேட்டு முன்பு ஆஜர்படுத்தி, அவரிடம் ரகசிய வாக்குமூலமும் பெறப்பட்டது. அது தொடர்பான அறிக்கையை போலீசார் ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்பு நேற்று காலையில் விசாரணைக்கு வந்தது.

முடிவு செய்ய இயலாது

அப்போது தென்காசி போலீசார் தரப்பில் அரசு வக்கீல் ஆஜராகி, குருத்திகாவை அவரது தாத்தா-பாட்டியிடம் ஒப்படைக்கக்கூடாது. ஏனென்றால், குருத்திகாவின் பெற்றோர் தலைமறைவாக இருக்க அவர்கள் உதவி உள்ளனர். எனவே அவர்களிடம் ஒப்படைத்தால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும், என தெரிவித்தார்.

அதற்கு நீதிபதிகள், "குருத்திகா மேஜர் என்பதால் அவர் யாருடன் இருக்க வேண்டும் என்பதை இந்த கோர்ட்டு முடிவு செய்ய இயலாது.

இதுதொடர்பாக அவரிடம் விசாரிக்க பிற்பகலில் அவரை ஆஜர்படுத்த வேண்டும்" என்று தென்காசி போலீசாருக்கு உத்தரவிட்டனர்.

பிற்பகலில் ஆஜர்படுத்தினர்

இதையடுத்து தென்காசி காப்பகத்தில் இருந்து குருத்திகாவை போலீசார் அழைத்து வந்து பிற்பகல் 3.30 மணி அளவில் ஐகோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

அப்போது அவரிடம் நீதிபதிகள், "நீங்கள் யாருடன் செல்ல விரும்புகிறீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.

அதற்கு குருத்திகா, "கேரளாவில் உள்ள தனது உறவினர் சுரேஷ் படேல் உடன் செல்ல விரும்புகிறேன்", என்று தெரிவித்தார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், அவரது விருப்பத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்யும்படி தெரிவித்தனர்.

உறவினரிடம் ஒப்படையுங்கள்

பின்னர் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், குருத்திகாவை அவரது விருப்பத்தின்படி, உறவினரிடம் ஒப்படைக்க வேண்டும். அவருக்கு உறவினர் உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும்.

குருத்திகா போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர வேண்டும். இந்த வழக்கில் பல இடங்களில் அதிகாரம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மனுதாரர் வினித், தனது திருமண விவகாரம் தொடர்பாக கீழ்கோர்ட்டில் முறையிட்டு பரிகாரம் தேடிக் கொள்ளலாம்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

இதையடுத்து கோர்ட்டில் இருந்து வெளியே வந்த குருத்திகாவை அவரது உறவினர் சுரேஷ் படேல் தரப்பினர் காரில் அழைத்துச் சென்றனர். இதே போல் வினித் மற்றும் அவருடைய தரப்பினர் வேறொரு காரில் சென்றனர்.


Next Story