பெருந்துறையில் 26-ந் தேதி நடக்கிறது ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்
ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள்
பெருந்துறையில் 26-ந் தேதி ஏழைகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். விழா நடைபெறும் இடத்தை அமைச்சர் சு.முத்துசாமி, கலெக்டர் கிருஷ்ணனுண்ணி ஆகியோர் பார்வையிட்டனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில், ஈரோடு மாவட்டத்தில் நடக்கும் தி.மு.க. தலைவரும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருகிறார்.
25-ந்தேதி கோபி கள்ளிப்பட்டியில் நடக்கும் கருணாநிதி சிலை திறப்பு விழாவை முடித்துவிட்டு அன்று இரவு ஈரோட்டில் தங்குகிறார். பின்னர் மறுநாள் 26-ந் தேதி ஈரோட்டில் நடக்க உள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார் என்று முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
பார்வையிட்டனர்
ஆனால் தற்போது 26-ந் தேதி ஈரோட்டுக்கு பதிலாக பெருந்துறையில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
இதைத்தொடர்ந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்தை தேர்வு செய்வதற்காக பெருந்துறை- கோவை ரோட்டில் உள்ள ஏரி கருப்பன் கோவில் பகுதிக்கு நேற்று ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, அமைச்சர் சு.முத்துசாமி சென்றனர். பின்னர் அந்த இடத்தை பார்வையிட்டனர். அப்போது அவர்களுடன் உதவி துணை போலீஸ் சூப்பிரண்டு கவுதம் கோயல், பெருந்துறை தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் கே.பி.சாமி, வடக்கு ஒன்றிய செயலாளர் பால்சின்னச்சாமி, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், கருமாண்டிசெல்லிபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வன், துணைத்தலைவர் சக்திகுமார், கவுன்சிலர்கள் துடுப்பதி நவபாரதி, செந்தில்குமார், பெருந்துறை பேரூராட்சி தலைவர் ராஜேந்திரன், திருவாச்சி ஊராட்சி மன்ற தலைவர் சோளிபிரகாஷ், வார்டு கவுன்சிலர்கள் கோகுல், நல்லசிவம், பால விக்னேஷ், சரவணன், சுப்பிரமணியன், ஜெயந்தி வாட்டர் கோபால், நந்தினி செல்வகுமார், துரைராஜ், வைகை சுரேஷ், தங்கமுத்து, சதீஷ், பிரவீன்குமார், பழனிச்சாமி, சுப்பிரமணி, ஒசப்பட்டி பொன்னுசாமி உள்பட கட்சி நிர்வாகிகள்மற்றும் அரசு அதிகாரிகள் இருந்தனர்.