பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கெடுபிடிகள்
கூடலூர் பகுதியில் பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கெடுபிடிகள் நிலவுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் முறையிட சட்ட நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.
கூடலூர்
கூடலூர் பகுதியில் பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்ய கெடுபிடிகள் நிலவுகிறது. இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலி னிடம் முறையிட சட்ட நடவடிக்கை குழு முடிவு செய்துள்ளது.
சட்ட நடவடிக்கை குழு கூட்டம்
கூடலூரில் நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழு கூட்டம், ஒருங்கிணைப்பாளர் இப்னு தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கூடலூர் பகுதியில் பட்டா நிலங்களை பத்திரப்பதிவு செய்வதற்கு தேவையற்ற கெடுபிடிகளை ஏற்படுத்தி பத்திரப்பதிவு செய்ய மறுத்து வருவது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
பின்னர், விளைநிலங்களை மனை நிலங்களாக பிரித்து விற்பனை செய்து வரும் மிகப்பெரும் ரியல் எஸ்டேட் நிறுவனங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் இத்தகைய நிலங்களை விற்பனை செய்ய டி.டி.சி.பி. அங்கீகாரம் பெற வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது.
தீர்மானங்கள்
மேலும், இந்த உத்தரவை காண்பித்து அங்கீகாரம் தேவையில்லாத சாமானிய மக்களின் நிலங்களுக்கு கூட அங்கீகாரம் பெற வேண்டும் என்று கெடுபிடி ஏற்படுத்தி வரும் நீலகிரி மாவட்ட பதிவுத்துறை அதிகாரிகளுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து எந்தெந்த நிலங்கள் பத்திரப்பதிவு செய்ய டி.டி.சி.பி. அங்கீகாரம் தேவை என்பது குறித்து விளக்கமான அறிவிப்பு வெளியிட வேண்டும், கூடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் நிரந்தரமாக சார் பதிவாளரை நியமிக்க வேண்டும். மனையாக பிரித்து விற்பனை செய்ய அங்கீகாரம் கிடைக்காத நிலங்கள் இருந்தால் விவசாயத்தின் மூலம் வருமானம் ஈட்ட மானியங்களையும், சலுகைகளையும் வழங்க வேண்டும். மேலும் விளைச்சல் இல்லாத காலங்களில் இழப்பீடு கிடைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
புதிய நிர்வாகிகள்
மேலும் இந்த பிரச்சினை தொடர்பாக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், பதிவுத்துறை அமைச்சர், பதிவு துறை உயர் அதிகாரிகளிடம் முறையிடுவது, அவர்களது கவனத்தை ஈர்க்க ஜனநாயக முறையிலான நடவடிக்கைகளை மேற்கொள்வது என்று முடிவு செய்யப்பட்டது.
முன்னதாக நில உரிமைகளுக்கான சட்ட நடவடிக்கை குழு புதிய தலைவராக இப்னு, செயலாளராக வக்கீல் ஜைனுல் பாபு, துணைத் தலைவராக சிவக்குமார், துணை செயலாளராக சுந்தரலிங்கம், பொருளாளராக அகமது யாசின் உள்பட நிர்வாகிகள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.