பழமர செடிகள் மானிய விலையில் பெற அழைப்பு
குண்டடம் வட்டாரத்தில் பழமர செடிகள் மானிய விலையில் பெற அழைப்பு
குண்டடம்
குண்டடம் வட்டாரத்தினை சேர்ந்த பொதுமக்களும், விவசாயிகளும் பயன்பெறுவதற்காக பழமர செடிகள் மானிய முறையில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக வழங்கப்படுகிறது. இதுகுறித்து தோட்டக்கலை உதவி இயக்குனர் ச.சசிகலா தெரிவித்துள்ளதாவது:-
நடப்பு நிதியாண்டில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக 5 வகையான பழமரச் செடிகள் மா, சப்போட்டா, கொய்யா, நெல்லி மற்றும் எலுமிச்சை போன்றவை அடங்கிய தொகுப்பானது 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்பட்டு வருகிறது. தொகுப்பு ஒன்றின் மொத்த விலை ரூ. 200, மானிய விலையில் ரூ.50-க்கு 5 வகை பழ மர செடிகள் அடங்கிய தொகுப்பினை ஒருவர் பெற்றுக் கொள்ளலாம். கிராமம் ஒன்றிற்கு மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் மூலமாக 176 எண்களும் மற்றும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 300 எண்களும் வழங்கப்படும். 2023- 24 நிதியாண்டில் குண்டடம் வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள கிராமங்களான பெரியகுமாரபாளையம், கண்ணாங்கோவில், செங்கோடம்பாளையம் மற்றும் பெல்லம்பட்டி ஆகிய ஊராட்சிகளுக்கு 80 சதவீத தொகுப்புகள் முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும். எஞ்சிய 20 சதவீத தொகுப்புகளை மற்ற கிராமங்களை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். ஊட்டச்சத்து மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி நிறைந், த ஆரோக்கியமாக வாழ்வதற்கு பெரிதும் உறுதுணையாக விளங்கும் இத்தகைய பழமரச் செடிகளை அனைவரும் பெற்று பயன் பெறலாம். இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் தங்களது விபரங்களை www.tnhorticulture.tn.gov.in/kit என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம் அல்லது தங்களது ஆதார் மற்றும் பாஸ்போர்ட் போட்டோ போன்றவற்றினை தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகத்தில் கொடுத்து பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு தோட்டக்கலை அலுவலர் ர.ரத்தின பாரதி 9488928722, உதவி தோட்டக்கலை அலுவலர் செ.சிவமூர்த்தி 9750327875, மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் மு.அபிராமி 6385536512 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
--------------