விளைச்சல் இல்லாத நிலையிலும் அறுவடை செய்யும் விவசாயிகள்


விளைச்சல் இல்லாத நிலையிலும் அறுவடை செய்யும் விவசாயிகள்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 10 Jan 2023 6:45 PM GMT)

மழை இன்றி காய்ந்து போனதால் விளைச்சல் இல்லாத நிலையிலும் சிறிதாவது நெல் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

ராமநாதபுரம்

முதுகுளத்தூர்,

மழை இன்றி காய்ந்து போனதால் விளைச்சல் இல்லாத நிலையிலும் சிறிதாவது நெல் கிடைக்குமா? என்ற ஏக்கத்தில் விவசாயிகள் நெற்பயிர்களை அறுவடை செய்து வருகின்றனர்.

பொய்த்துப்போன பருவமழை

ராமநாதபுரம் மாவட்டம் இன்றுவரை வானம் பார்த்த பூமியாகத்தான் உள்ளது. ஏனெனில் தமிழகத்தின் பிற மாவட்டங்களை விட இந்த மாவட்டத்தில் மழை என்பது மிக மிக குறைவுதான். ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை சீசனை எதிர்பார்த்ததுதான் மாவட்டத்தில் நெல் விவசாய பணிகளை விவசாயிகள் தொடங்குகின்றனர். அதன்படி இந்த ஆண்டும் வடகிழக்கு பருவமழை சீசன் கடந்த அக்டோபர் மாத இறுதியில் தொடங்கியதை தொடர்ந்து மாவட்டத்தில் பல ஊர்களிலும் நெல் விவசாய பணிகளில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதுபோல் முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பல கிராமங்களிலும் விவசாயிகள் நெற்பயிர் விவசாயத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். இதனிடையே கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே முதுகுளத்தூர் தாலுகாவை சுற்றிய பெரும்பாலான கிராமங்களில் மழை பெய்யாததால் வடக்கு மல்லல், தெற்கு மல்லல், ஆதங்கொத்தங்குடி, பூசேரி, பனிவாசல் உள்ளிட்ட பல கிராமங்களிலும் தண்ணீர் இல்லாமல் நெற்பயிர்கள் காய்ந்து போய் காட்சியளித்து வருகின்றது. காய்ந்து வரும் நெற்பயிர்களில் சிறிதாவது நெல் கிடைக்குமா என்ற ஏக்கத்தில் விவசாயிகள் அதை அறுவடை செய்து கதிரடிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

அறுவடை

இதுகுறித்து முதுகுளத்தூர் அருகே பனிவாசல் பகுதியை சேர்ந்த விவசாயி கணேசன் கூறும்போது, 3 ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகின்றேன். இந்த ஆண்டு மழையே இல்லாததால் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் முழுமையாக தண்ணீர் இல்லாமல் காய்ந்து விட்டது. நெற்பயிர்களில் விளைச்சல் இல்லை என தெரியும். இருந்தாலும் அந்த நெற்பயிர்களில் ஏதாவது நெல் இருக்குமா என்ற ஒரு ஏக்கத்தில் அறுவடை செய்து கதிரடித்து வருகின்றேன். நெல் இல்லாமல் வெறும் சாவியாகவே உள்ளது.

ஒரு ஏக்கருக்கு ரூ.30000 வரை செலவு செய்தும் நஷ்டம்தான் ஏற்பட்டுள்ளது. மழை பெய்தால் மட்டுமே தான் எங்களுக்கு கிராமத்தில் உள்ள கண்மாயிலும் தண்ணீர் வரும், மழையும் இல்லாததால் கண்மாயும் வறண்டு போய்விட்டது. வைகை தண்ணீர் வருவதற்கும் நீர்ப்பாசன வசதிகள் இல்லை. மழை பெய்யாதுடன் மட்டுமில்லாமல் எங்கள் பகுதிக்கு வருவதற்கு நீர் பாசன வசதிகள் பாதைகள் எதுவும் இல்லாததாலும் நெல் விவசாயம் முழுமையாக பாதிக்கப்பட்டு விட்டது. இதனால் தண்ணீர் இல்லாமல் நெல் விவசாயம் முழுமையாக இந்த ஆண்டு பாதிக்கப்பட்டு விட்டது. எனவே, பாதிக்கப்பட்ட நெல் விவசாயிகளுக்கு உடனடியாக அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story