அமைதியை குலைக்க வந்திருக்கிறாரா? கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்


அமைதியை குலைக்க வந்திருக்கிறாரா? கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்
x

கவர்னர் ஆர்.என்.ரவி எதிர்க்கட்சி தலைவர் போல செயல்படுகிறார் என்று தி.மு.க. அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார்.

சென்னை,

தமிழகத்தில் தி.மு.க. அரசு ஆட்சி பொறுப் பேற்று நேற்றுடன்2 ஆண்டுகள் நிறைவடைந்தது.

அதையொட்டி, தமிழகம் முழுவதும் அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

பொதுக்கூட்டம்

காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கண்டோன்மென்ட் பல்லாவரத்தில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக்கூட்டத்துக்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமை தாங்கினார்.

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் முக்கிய விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-

வரலாற்றில் மோசமான ஆட்சி

1991-96-ம் ஆண்டு நடந்த அ.தி.மு.க. ஆட்சி காலம்தான் தமிழக வரலாற்றில் மோசமான ஆட்சி காலமாக கருதப்பட்டது. அதைவிட மோசமாக 2016-21-ம் ஆண்டு ஆட்சி காலம் இருந்தது.

இதனால் விடியல் பிறக்காதா, தி.மு.க. ஆட்சி மீண்டும் வராதா? என ஏங்கி கிடந்த மக்களின் தாகம் தீர்க்க, 2021-ம் ஆண்டு மே மாதம் உதயமானதுதான் உதயசூரியன் ஆட்சி. இந்த 2 ஆண்டுகளில் 10 ஆண்டு கால பாதாளத்தை சரிசெய்துள்ளோம். 5 ஆண்டு செய்யவேண்டிய சாதனைகளை 2 ஆண்டுகளில் செய்துகாட்டி இருக்கிறோம்.

காலாவதியான கொள்கை அல்ல

திராவிடம் என்றால் காலாவதியான கொள்கை என்று கவர்னர் ஆர்.என்.ரவி சொல்லியிருக்கிறார். அவருக்கு சொல்வேன், திராவிடம் என்பது காலாவதியான கொள்கை அல்ல. சனாதனத்தை, வருணாசிரமத்தை, மனுநீதியை, சாதியின் பெயரில் இழிவுசெய்வதை, பெண் என்பதால் புறக்கணிப்பதை காலாவதி ஆக்கியதுதான் திராவிடம். இன்னும் அழுத்தமாக சொல்கிறேன். ஆரியத்தை வீழ்த்தும் சக்தி திராவிடத்துக்கு மட்டும்தான் உண்டு.

எத்தகைய படையெடுப்புகள். அந்நிய படையெடுப்புகளாக இருந்தாலும், ஆரிய படையெடுப்புகளாக இருந்தாலும் அதை வீழ்த்தும் ஆயுதம்தான் திராவிடம்.

திராவிட மாடல் என்றால் என்ன?

திராவிட மாடல் என்பது எதையும் சிதைக்காது, சீர் செய்யும். திராவிட மாடல் யாரையும் பிரிக்காது, அனைவரையும் ஒன்று சேர்க்கும். திராவிட மாடல் என்பது யாரையும் தாழ்த்தாது, அனைவரையும் சமமாக நடத்தும். திராவிட மாடல் என்பது யாரையும் புறக்கணிக்காது, தோளோடு, தோள் நின்று அரவணைக்கும். அப்படிப்பட்ட திராவிட மாடல் வளர்ச்சி பயணமானது, வெற்றி பயணமாக ஏறுமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது.

இந்தியாவின் பெரிய மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. இந்தியா முழுமைக்குமான பணவீக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டுக்கான பணவீக்கம் குறைந்திருக்கிறது. இது அண்மையில் மத்திய அரசு வெளியிட்டிருக்கக்கூடிய புள்ளி விவரம். மக்களுடைய வாங்கும் திறன் தமிழ்நாட்டில் அதிகரித்திருக்கிறது.

எதிர்க்கட்சி தலைவர் போல...

இந்த வேகத்தில் சென்றால் தமிழ்நாடு தன்னிகரற்ற மாநிலமாக உயர்ந்துவிடும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதை பார்த்துதான் சிலருக்கு வயிறு எரிகிறது. மோசமான நிதி நிலைமையை கூட சீர் செய்துவிட்டார்களே, நிர்வாகத்தை சீர்படுத்தி விட்டார்களே என்று சிலர் குழப்பிவிட்டு இருக்கிறார்கள். அய்யோ, தமிழ்நாடு எந்த கலவரமும் இல்லாமல் இருக்கிறதே, அமைதி பூங்காவாக இருக்கிறதே, தமிழகத்தை நோக்கி ஏராளமான புதிய தொழில்கள் வருகிறதே, நாம் இனிமேல் பிழைப்பு நடத்த முடியாதே என்ற பொறாமையில், வன்மத்தோடு அவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

அ.தி.மு.க. போன்ற எதிர்க்கட்சிகள் பேசுவதை பற்றி நான் கொஞ்சம் கூட கவலைப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் அப்படித்தான் பேசுவார்கள். அப்படித்தான் பேசியாக வேண்டும். ஆனால் அரசின் நிர்வாகத்தின் அங்கமாக இருக்கக்கூடிய கவர்னர் எதற்காக எதிர்க்கட்சி தலைவரை போன்று செயல்பட வேண்டும்?.

அமைதியை குலைக்க...

எந்த நோக்கத்துக்காக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்?. மாநிலத்தில் நிலவும் அமைதியை குலைக்க வந்திருக்கிறாரா?. தமிழ்நாட்டின் சமூக சூழலை ஏதாவது பேசி குழப்புவதற்காக அனுப்பிவைத்திருக்கிறார்களா? என்பதுதான் மக்களின் சந்தேகமாகவும், கருத்தாகவும் இருக்கிறது.

சில நாட்களுக்கு முன்னால், ஆங்கில பத்திரிகைக்கு கவர்னர் பேட்டி கொடுத்திருக்கிறார். அதில் அரசு மீது அவதூறான கருத்துகளை சொல்லியிருக்கிறார். அதே பேட்டியில் முதல்-அமைச்சர் நல்ல மனிதர் என்று கூறியுள்ளார். என்னிடம் அன்பாக நடந்து கொள்கிறார் என்றும், அவரும் என்னுடன் நட்பாக இருக்கிறார் என்றும் சொல்லி இருக்கிறார். அதனால் கவர்னருக்கு நான் நன்றியை தெரிவிக்கிறேன்.

எவ்வளவு விமர்சனங்கள் இருந்தாலும், நட்பு பாராட்டுவதுதான் தமிழர் பண்பாடு என்பதை பெரியாரும், அண்ணாவும், கருணாநிதியும் எங்களுக்கு கற்று தந்து இருக்கிறார்கள். அந்த அடிப்படையில் எந்த காலத்திலும், எந்த சூழலிலும் அந்த பண்பில் இருந்து இம்மி அளவு கூட விலகிவிட மாட்டேன்.

அமைதிப்பூங்கா இல்லையா?

ஆனால் அதேநேரத்தில் கொள்கையையும் குழப்பிக்க மாட்டேன். தனிப்பட்ட நட்புக்காக கொள்கையை விட்டுக்கொடுக்க மாட்டேன். அதில் என்றும் உறுதியாக இருப்பான் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

தமிழ்நாடு அமைதி பூங்காவாக இல்லை என்று கவர்னர் ஆர்.என்.ரவி கூறியிருக்கிறார். பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலம் பற்றி எரிகிறதே? அதுபோல் தமிழ்நாடு பற்றி எரிகிறதா?. என்ன பேசுகிறார் கவர்னர். சில நாட்களுக்கு முன்பு கர்நாடகா மாநிலத்தில் கலவரம் நடந்ததே அது பா.ஜ.க. ஆளும் மாநிலம் தானே. அதுபோல் இங்கு நடந்ததா?.

பி.எப்.ஐ. என்ற அமைப்பை தடை செய்ததை தொடர்ந்து வன்முறை நடந்ததாக சொல்கிறார். அந்த சம்பவங்களில் ஒரு உயிரிழப்பு கூட ஏற்படவில்லை என்பதுதான் உண்மை. தொடர்புடைய 16 பேரும் உடனடியாக கைது செய்யப்பட்டனர். 6 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

ஆயுதங்கள் கடத்தல் கும்பல்

சர்வதேச போதைப்பொருள் மற்றும் ஆயுதங்கள் கடத்தல் கும்பல் ஒன்றுக்கு, தமிழ்நாட்டுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக கவர்னர் சொல்கிறார். தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு அப்படி எந்த தகவலும் எங்களுக்கு வரவில்லை. 2021-ம் ஆண்டு தி.மு.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பு அப்படி ஒரு தகவல் வந்திருக்கிறது. அதற்கும், தி.மு.க. ஆட்சிக்கும் தொடர்பே கிடையாது. பிறகு எதற்காக பழைய சம்பவங்களை சொல்லி தி.மு.க. ஆட்சிக்கு கவர்னர் களங்கம் ஏற்படுத்துகிறார்.

19-4-2022 அன்று தருமபுரம் ஆதீனத்துக்கு தான் போனபோது அவருடைய வாகனம் வழிமறித்து தாக்கப்பட்டதாக அபாண்டமாக பொய் சொல்லி இருக்கிறார். 'பச்சைப் பொய். அண்டப்புழுகு, ஆகாசப்புழுகு' என்று சொல்வார்களே. தனது வாகனம் வழிமறிக்கப்பட்டதாக அவர் சொல்வது பச்சைப் பொய்.

அபாண்டமான பொய்

அதேபோன்றுதான் சிதம்பரத்தில் நடந்த குழந்தைகள் திருமணம் தொடர்பான வழக்கை முன்வைத்து கவர்னர், தமிழ்நாடு அரசுக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்துக்கு அப்போதே அவருக்கு பதில் கடிதம் அனுப்பி இருக்கிறோம். ஆனால் பதில் அனுப்பவில்லை என்று அபாண்டமான பொய்யை சொல்கிறார்.

நேற்று முன்தினம் போலீஸ் டி.ஜி.பி. இது சம்பந்தமாக தெளிவாக பதில் அளித்து அறிக்கை கொடுத்து இருக்கிறார்.

அந்த காலத்தில் 7, 8 வயதில் பெண் பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைத்தார்களே, அத்தகைய சனாதன காலத்தை உருவாக்க நினைக்கிறாரா?. 13 வயது சிறுமிக்கும், 15 வயது சிறுவனுக்கும் திருமணம் செய்து வைத்தால் அது தவறு. அதனால் தான் 11 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் என்ன குற்றம் கண்டுபிடிக்கிறார், கவர்னர். குழந்தை திருமணத்தை ஆதரிக்கிறாரா? இதனை கண்காணிப்பதற்காகத்தான் தமிழ்நாட்டுக்கு வந்திருக்கிறாரா?.

கவர்னர் மாளிகையில் ஆட்சி?

யாரோ சிலரின் கைப்பாவையாக கவர்னர் செயல்படுகிறார் என்ற சந்தேகம்தான் இதன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் மனதில் வலுப்படுகிறது. கவர்னர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு ஆட்சி நடத்த பார்க்கிறார். மத்திய அரசை ஆளும் அதிகாரம் பிரதமருக்கு இருக்கிறது.

அதேபோல மாநிலத்தை ஆளும் அதிகாரம் முதல்-அமைச்சருக்கும், அமைச்சரவைக்கும்தான் இருக்கிறது. சட்டத்தை இயற்றும் அதிகாரம் சட்டமன்றத்துக்குதான் இருக்கிறது. இதனை மாற்றி, தனக்கு ஏதோ சர்வ அதிகாரம் இருப்பது போல கவர்னர் நினைத்துக்கொள்கிறார். ஏராளமான சட்டங்களை நிறைவேற்றுகிறோம் என்றால் எடுத்தோம், கவிழ்த்தோம் என்று எதையும் நிறைவேற்றுவது கிடையாது.

அனைத்துமே சரியான முன்னேற்பாடுகளுடன்தான் செய்யப்படுகிறது. அதில் கவர்னருக்கு சந்தேகம் இருந்தால் மாநில அரசிடம் விளக்கம் கேட்கலாம். விளக்கம் சொல்ல நாங்களும் தயாராகவே இருக்கிறோம். மாறாக, பரிசீலனை செய்கிறோம் என்ற போர்வையில் மசோதாக்களை எல்லாம் ஊறுகாய் பானையில் ஊறவைப்பது போல கவர்னர் மாளிகையிலேயே முடக்க நினைத்தால், அதுகுறித்து கேள்வி கேட்கும் உரிமை மக்களால் தேர்வு செய்யப்பட்டிருக்கும் மாநில அரசுக்கு உண்டு.

மக்களாட்சிக்கு அவமானம்

அதனால்தான் நிறைவேற்றி அனுப்பப்படும் சட்டத்தின் மீது முடிவு எடுக்க கால நிர்ணயம் தேவை என தீர்மானம் நிறைவேற்றினோம். அதை அனுப்பியும் வைத்தோம். மக்கள் தேர்வு செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதிகளால் உருவாக்கப்பட்ட சட்டத்தை ஒரு நியமன கவர்னர் நிறுத்தி வைப்பார் என்றால், அதைவிட மக்களாட்சிக்கு அவமானம் இருக்க முடியுமா?.

கவர்னர் கையெழுத்தே தேவையில்லை என்பதை அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவந்து நீக்க வேண்டாமா? அதற்கான குரலைத்தான் எழுப்புகிறோம். இதையும் இந்த திராவிட மாடல் அரசு செயல்படுத்தி காட்டும். கவர்னர் மூலமாகவோ, வேறு யார் மூலமாகவோ எங்களை அச்சுறுத்த நினைத்தால், அதற்காக அஞ்சுபவர்கள் நாங்கள் அல்ல. மொழிப்போரை, மிசாவை, தடாவை, பொடாவை பார்த்தவர்கள் நாங்கள். இதையெல்லாம் பார்த்து மிரண்டுபோக மாட்டோம். எங்களுக்கு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கிய பயணத்தை எந்தவித சமரசத்துக்கும் இடமில்லாமல், யாருக்கும் அஞ்சாமல் செய்து காட்டுவோம்.

நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராவோம்

தமிழகத்தை முன்னேற்றும் திராவிட மாடலை இந்தியா முழுமைக்கும் கொண்டு சேர்ப்போம். மத்திய அளவில் ஒற்றுமையை உருவாக்கி உன்னத அரசை தலைநகர் டெல்லியில் அமர்த்துவோம்.

நாடாளுமன்ற தேர்தல் நம்மை நோக்கி வந்துகொண்டு இருக்கிறது. தயாராவோம்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பொதுக்கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இ.கருணாநிதி, எழிலரசன், வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Related Tags :
Next Story