6 முறை கருமுட்டை தானமாக வழங்கலாம் என்ற ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்


6 முறை கருமுட்டை தானமாக வழங்கலாம் என்ற ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்
x

ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என்பதற்கான அறிவியல்பூர்வமான ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தவர்களுக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

செயற்கை கருத்தரித்தலை முறைப்படுத்தும்வகையில், இனப்பெருக்க தொழில்நுட்ப முறைப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதில் உள்ள சட்டப்பிரிவுகளை எதிர்த்து காஞ்சீபுரம், சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பல மாவட்டங்களைச் சேர்ந்த, கருமுட்டைகளை தானமாக பெற விரும்பும் 143 பெண்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.

அதில் கூறியிருப்பதாவது:-

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தின்படி, கருமுட்டைகளை அதற்கான வங்கிகளில் இருந்து மட்டுமே பெறவேண்டும். ஆனால் இதற்கான கருமுட்டை வங்கிகள் இன்னும் ஏற்படுத்தப்படவில்லை.

கருமுட்டைகள்

23 வயது முதல் 35 வயது வரையிலான பெண்களிடம் அவர்களின் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கருமுட்டைகளை எடுக்க வேண்டும். குழந்தையில்லாத தம்பதியருக்கு ஒருமுறைக்கு மேல் கருமுட்டைகளையோ அல்லது விந்தணுக்களையோ தானமாக வழங்கக்கூடாது என்று அந்த சட்டத்தில் நிர்பந்திக்கப்பட்டுள்ளது. குழந்தையின்மை பிரச்சினை அதிகரித்துவரும் இக்காலகட்டத்தில் இது மருத்துவரீதியாக நடைமுறை சாத்தியமற்றது.

ஐரோப்பிய நாடுகள் நடத்திய ஆய்வில், ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் குழந்தையில்லாத தம்பதியினர், செயற்கை கருத்தரித்தல் மூலமாக குழந்தை பெற்றுக்கொள்ளும் உரிமையை பறிக்கும் செயல் என்பதால் இந்த சட்டப்பிரிவுகளை ரத்து செய்ய வேண்டும்.

ஆய்வு அறிக்கை

மேலும், கருமுட்டை வங்கிகள் அமைக்கும்வரை கருமுட்டைகளை தானமாக பெற்று செயற்கை கருத்தரித்தல் நடைமுறையை தொடர அனுமதிக்க வேண்டும். அத்துடன் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் விதிகளின்படி 6 முறை கருமுட்டைகளை தானமாக பெற அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கோரப்பட்டு இருந்தது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர், ஒரு பெண் தனது வாழ்நாளில் 6 முறை கருமுட்டைகளை தானமாக வழங்கலாம் என்பதற்கான அறிவியல் பூர்வமான ஆய்வறிக்கை உள்ளதா என கேள்வி எழுப்பினர்.

அவகாசம்

அதற்கு மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் எம்.புருஷோத்தமன், இதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய அவகாசம் வேண்டும் என்றார். இதையடுத்து அந்த அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜனவரி மாதத்துக்கு தள்ளி வைத்தனர்.


Next Story