எந்திரம் கிடைக்காததால் வீணாகும் வைக்கோல்: கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் -விவசாயிகள் வேதனை
எந்திரம் கிடைக்காததால் வீணாகும் வைக்கோல்: கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு அபாயம் -விவசாயிகள் வேதனை
ஆனைமலை
ஆனைமலை பகுதியில் 5400 ஏக்கரில் நெல் விவசாயம் ஆண்டுக்கு இரண்டு போகத்தில் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் பருவ மழையால் நெல் வயலில் மழைநீரால் வைக்கோல்கள் நனைந்து வீணாகின. ஆட்கள் பற்றாக்குறை, அறுவடை எந்திரம் போதிய அளவு கிடைக்காததால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளுக்கு தீவன தட்டுப்பாடு ஏற்படும் அபாயமும் உள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:- ஆனைமலை பகுதியில் வடகிழக்கு பருவமழையால் நெல் வயலில் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.6 ஆயிரம் வரை விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. மேலும் அறுவடை காலத்தில் வைக்கோல் சுருட்டும் எந்திரம் போதுமான அளவு கிடைக்காததால் மழை நீரில் வைகோல்கள் நனைந்து வீணாகின. எனவே அறுவடை காலத்தில் கூடுதல் அறுவடை எந்திரமும், வைக்கோல் சுருட்டும் எந்திரமும் கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பகுதியில் 30 கிலோ எடை கொண்ட வைக்கோல் கட்டு ரூ.200-க்கு விற்பனையானது. ஆனால் வெளி மாவட்டங்களில் ரூ.300 முதல் 350 ரூபாய் வரை வாங்கப்படுகிறது. இந்த நிலை தொடர்ந்தால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். அதனால் அரசும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.