ரூ.2¼ லட்சத்தை நிதிநிறுவனத்திடம் ஒப்படைத்த108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள்
விபத்தில் சிக்கி நினைவிழந்த ஊழியரிடம் இருந்து மீட்கப்பட்ட ரூ.2¼ லட்சத்தை நிதிநிறுவனத்திடம் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
நிதி நிறுவன ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே உள்ள குழிப்பட்டியை சேர்ந்தவர் சேகர். அவருடைய மகன் ஜெகநாதன் (வயது 21). இவர், வத்தலக்குண்டு பகுதியில் உள்ள தனியார் நிதிநிறுவனத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.
நிதி நிறுவனத்தில் கடன் வாங்கிய வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை வசூலிக்கும் வேலை செய்து வருகிறார். அதன்படி நேற்று முன்தினம் இவர் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே உள்ள கெங்குவார்பட்டி பகுதியில் பணம் வசூலித்தார்.
பின்னர் அவர், தான் வசூலித்த ரூ.2 லட்சத்து 20 ஆயிரத்து 983-த்துடன் இரவு 8 மணி அளவில் வத்தலக்குண்டு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
சுய நினைவிழப்பு
திண்டுக்கல்-குமுளி பைபாஸ் சாலையில் வத்தலக்குண்டு அருகே கணவாய்பட்டி பிரிவு அருகே மோட்டார் சைக்கிள் வந்தது. அப்போது சாலையோரத்தில் பழுதடைந்து நின்ற சரக்கு வேன் மீது மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
இதில் படுகாயம் அடைந்த ஜெகநாதன் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். மேலும் அவர் சுயநினைவை இழந்து சாலையில் கிடந்தார். இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவரை மீட்டு வாகனத்தில் ஏற்றினர். ஜெகநாதனின் அருகே அவர் வசூலித்த பணமும் ஒரு பையில் கிடந்தது. அதனை டிரைவர் வனராஜா, மருத்துவ உதவியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் எடுத்தனர்.
பணம் ஒப்படைப்பு
இதற்கிடையே அவர்கள், காயம் அடைந்த ஜெகநாதனை வத்தலக்குண்டுவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே ஜெகநாதனிடம் இருந்து மீட்கப்பட்ட பணம் குறித்து சம்பந்தப்பட்ட நிதிநிறுவனத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் வத்தலக்குண்டுவுக்கு வந்த நிதி நிறுவன மேலாளரிடம் டிரைவர் வனராஜா, மருத்துவ உதவியாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் ஒப்படைத்தனர்.
விபத்தில் சிக்கியவரிடம் இருந்து மீட்கப்பட்ட பணத்தை, நிதி நிறுவனத்திடம் ஒப்படைத்த ஆம்புலன்ஸ் ஊழியர்களின் நேர்மையை அனைத்து தரப்பினரும் பாராட்டினர்.