சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயற்சி
கரூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிக்க முயன்ற 2 பேரில் ஒருவரை பொதுமக்கள் மடக்கி பிடித்தனர். தப்பியோடிய மற்றொருவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
தங்க சங்கிலியை பறிக்க முயற்சி
கரூர் வெங்கமேடு சோழன் நகர் 2-வது கிராசை சேர்ந்தவர் சரஸ்வதி(வயது 48). கரூரில் உள்ள ஒரு தனியார் ஜவுளி நிறுவனத்தில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பணி முடிந்து வீட்டிற்கு செல்வதற்காக வெங்கமேடு எஸ்.பி. காலனி பஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து வந்த 2 மர்ம நபர்கள் திடீரென சரஸ்வதியின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சி அடைந்த சரஸ்வதி தங்க சங்கிலியை பிடித்துக் கொண்டு திருடன் திருடன் என கூச்சலிட்டார்.
ஒருவர் கைது
இதனை கேட்ட அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தங்க சங்கிலியை பறிக்க முயன்றவர்களில் ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்றொருவர் பொதுமக்களை தள்ளி விட்டுவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். பின்னர் இதுகுறித்து பொதுமக்கள் வெங்கமேடு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொதுமக்கள் மடக்கிப்பிடித்து வைத்திருந்தவரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளை ஊரணி காமராஜர் தெருவை சேர்ந்த எட்வின்ராஜ்(34) என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றொரு நபரை வலைவீசி தேடி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.