மனைவி, மகளை மீட்டு தரக்கோரிபோலீஸ் நிலையம் முன் பொக்லைன் டிரைவர், பெற்ேறாருடன் தீக்குளிக்க முயற்சி:கம்பத்தில் பரபரப்பு
கம்பத்தில், மனைவி, மகளை மீட்டு தரக்கோரி போலீஸ் நிலையம் முன் பொக்லைன் டிரைவர், பெற்ேறாருடன் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
குடும்ப பிரச்சினை
தேனி மாவட்டம் கம்பம் மாலையம்மாள்புரத்தைச் சேர்ந்தவர் குமார் (வயது 35). பொக்லைன் எந்திர டிரைவர். இவரது மனைவி சுகன்யா (28). இந்த தம்பதிக்கு சபிட்சா (9) என்ற மகளும், சத்தி (5) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த 3-ந்தேதி கணவன், மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.
இதனால் சுகன்யா கோபித்து கொண்டு தனது மகளுடன் வெளியே சென்றார். அதன் பின்னர் திரும்பி வரவில்லை. இதைத்தொடர்ந்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் குமார் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான தாய், மகளை தேடி வந்தனர்.
இதற்கிடையே கடந்த 15-ந் தேதி சுகன்யா போலீஸ் நிலையத்திற்கு ஒரு கடிதம் அனுப்பினார். அதில், குடும்ப பிரச்சினை காரணமாகத்தான் வீட்டை விட்டு சென்றேன். போலீஸ் நிலையத்திற்கு வர விருப்பம் இல்லை என்றும் சட்டப்படி பார்த்துக் கொள்வதாகவும் கூறியிருந்தார். அதன்பின்னர் போலீசார் குமாரை அழைத்து சுகன்யா அனுப்பிய கடிதத்தை காண்பித்தனர்.
தீக்குளிக்க முயற்சி
இந்நிலையில் நேற்று முன்தினம் வடக்கு போலீஸ் நிலையத்திற்கு குமார், தனது தந்தை பழனிச்சாமி, தாயார் பழனியம்மாள் ஆகியோருடன் வந்தார். பின்னர் போலீஸ் நிலையம் முன்பு நின்று காணாமல் போன மனைவி மற்றும் மகளை கண்டுபிடித்து தருமாறு சத்தம் போட்டார்.
அப்போது திடீரென குமார் பையில் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் கேனை எடுத்தார். பின்னர் 3 பேர் உடலிலும் பெட்ரோலை ஊற்றி தற்கொலைக்கு முயன்றனர். இதையடுத்து போலீசார் விரைந்து வந்து கேனை பிடுங்கி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதைத்தொடர்ந்து அவர்களை அழைத்து அறிவுரை வழங்கி சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீஸ் நிலையம் முன் பொக்லைன் எந்திர டிரைவர், பெற்ேறாருடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.