போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு


போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்ம சாவு
x

போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டவர் மர்மமான முறையில் இறந்தார்.

திருச்சி

சமயபுரம்:

செல்போன் திருட முயற்சி

திருச்சி மாவட்டம், சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நேற்று அம்மனை தரிசனம் செய்வதற்காக திரளான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் ஒரு பக்தரிடம் செல்போன் திருட முயன்றதாக ஒருவரை, கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் பிடித்து, சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்ததாக கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் அரியலூர் மாவட்டம் ஓரியூரை சேர்ந்த முருகானந்தம் (வயது 38) என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்தில் உள்ள சிறை அறையில் போலீசார் வைத்திருந்ததாக தெரிகிறது.

அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு...

இந்நிலையில், அவர் போலீஸ் நிலையத்தில் உள்ள கழிவறையின் ஜன்னல் கம்பியில், தனது இடுப்பில் கட்டியிருந்த அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று காலை 11 மணி அளவில் நடைபெற்றதாக தெரிகிறது. ஆனால் மாலை 4 மணி வரை முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் எடுத்துச் செல்லவில்லை.

இதுபற்றி தகவல் அறிந்த திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி. சரவணசுந்தர், திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார், மண்ணச்சநல்லூர் தாசில்தார் சக்திவேல் முருகன் மற்றும் போலீஸ் அதிகாரிகள் சமயபுரம் போலீஸ் நிலையத்திற்கு வந்தனர். அவர்கள், அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினர்.

அடித்ததால் சாவு?

இதையடுத்து முருகானந்தத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக, ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இடுப்பில் கட்டியிருக்கும் அரைஞாண் கயிற்றால் ஒருவர் எப்படி தூக்குப்போட்டு இறக்க முடியும் என்று சந்தேகம் எழுவதாகவும், போலீசார் அடித்ததால் தான் அவர் இறந்திருக்கக் கூடும் என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து நிருபர்களிடம், டி.ஐ.ஜி. சரவணசுந்தர் கூறியதாவது;-

உயிரிழந்த நபா், பக்தர்களிடம் செல்போன் திருட முயற்சி செய்ததாக, சமயபுரம் கோவிலில் பாதுகாப்பு பணியில் இருந்தவர்கள் பிடித்து, சமயபுரம் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் அவர் கழிவறையில் அரைஞாண் கயிற்றால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே, அதன் உண்மை தன்மைக்கேற்ப விசாரணை நடத்தி, போலீசார் அத்துமீறி நடந்து கொண்டதால் அவர் உயிரிழந்ததாக தெரியவந்தால் பாரபட்சமில்லாமல் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், போலீஸ் நிலையம் வரும் நபர்களிடம் கண்ணியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் உயிரிழந்த நபர் மீது கடந்த 2021-ம் ஆண்டு தனது தாயை கொன்றதாக வழக்கு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story