3 நாட்களாக வீட்டு காவலில் இருந்த வக்கீல் சகோதரிகள் கைது
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பிக்க போவதாக அறிவித்ததால் 3 நாட்கள் வீட்டு சிறையில் இருந்த வக்கீல் சகோதரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
பிரதமர் மோடிக்கு கருப்பு கொடி காண்பிக்க போவதாக அறிவித்ததால் 3 நாட்கள் வீட்டு சிறையில் இருந்த வக்கீல் சகோதரிகள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
கருப்பு கொடி
மதுரை புதூர் காந்திபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆனந்தன். இவரது மூத்த மகள் நந்தினி, இளைய மகள் நிரஞ்சனா. இருவரும் வக்கீல்கள். பல்வேறு ஊர்களில் போராட்டங்களில் பங்கேற்று இவர்கள் அடிக்கடி கைது செய்யப்படுவது வழக்கம். இந்த நிலையில் மதுரை வரும் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி காட்டப்போவதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து கடந்த 9-ந் தேதி அவரை புதூர் போலீசார் வீட்டு காவலில் வைத்திருந்தனர். இதற்காக அவரது வீட்டின் அருகே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். மேலும் அவர்கள் 3 மணி நேர பிரதமர் வருகைக்காக 3 நாட்களாக எங்கள் குடும்பத்தை வீட்டுக்காவலில் வைத்திருப்பதாக கூறி எதிர்ப்பு தெரிவித்தனர்.
வக்கீல் சகோதரிகள் கைது
இந்த நிலையில் வீட்டிலேயே இருந்த அவர்கள் நேற்று பகல் 11 மணி அளவில் கருப்புக்கொடி காட்டப்போவதாக கூறி வீட்டில் இருந்து கிளம்பி வெளியே வந்தனர். அப்போது அங்கிருந்த போலீசார் கருப்பு கொடியுடன் வந்த சகோதரிகள் நந்தினி, நிரஞ்சனா ஆகியோரை கைது செய்து புதூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். அங்கு மாலை வரை வைக்கப்பட்டு, பிரதமர் மோடி மதுரையில் இருந்து விமானத்தில் புறப்பட்டு சென்ற பின்னர் விடுவிக்கப்பட்டனர்.