மகன்களுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரம் ரத்து
தந்தையை கவனிக்காததால் அவர் தனது மகன்களுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
வேதாரண்யம்:
தந்தையை கவனிக்காததால் அவர் தனது மகன்களுக்கு எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
புகார் மனு
வேதாரண்யம் தோப்புத்துறை சிவன் தெற்கு வீதியை சேர்ந்தவர் தங்கராசு. இவருக்கு சரவணன், ரமேஷ் ஆகிய 2 மகன்களும், 4 மகள்களும் உள்ளனர். இவருடைய மனைவி கடந்த 2003-ம் ஆண்டு இறந்துவிட்டார். இதனால் தங்கராசு தனது மகன்களுடன் வசித்து வந்தார்.
இந்த நிலையில் தனது சொத்துக்களை மகன்கள் எழுதி வாங்கிக்கொண்டும், மகள்களுக்கு சரியாக சீர்வரிசை செய்யாமல் திருமணம் செய்து கொடுத்ததாகவும், தன்னை பராமரிக்காமல் மகன் ரமேஷ் அவரது வீட்டில் இருந்து என்னை வெளியேற்றி விட்டார் என்றும், தன்னை கவனிக்காத மகன்களுக்கு நான் எழுதி கொடுத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்ய வேண்டும் என வேதாரண்யம் வருவாய் கோட்டாட்சியர் மதியழகனிடம் தங்கராசு புகார் மனு அளித்தார்.
சொத்து பத்திரம் ரத்து
இதை தொடர்ந்து தங்கராசுவின் மகன்கள் ரமேஷ், சரவணன் ஆகியோரை விசாரணைக்காக ஆஜராக வேண்டும் என வருவாய் கோட்டாட்சியர் உத்தரவிட்டார். இதையடுத்து ரமேஷ் மட்டும் ஆஜராகி விளக்கம் அளித்தார். சரவணன் வெளிநாட்டில் இருப்பதாக விசாரணைக்கு ஆஜராகவில்லை.
இருதரப்பினரிடம் நடத்திய விசாரணையில் மகன்கள் 2 பேரும் தந்தை தங்ராசுவை கவனிக்கவில்லை என்பது நிருபணமாகி உள்ளது. இதனால் தங்கராசு தனது மகன்கள் சரவணன், ரமேஷ் ஆகியோருக்கு எழுதி கொடுத்த சொத்து செட்டில்மெண்ட் பத்திரத்தை ரத்து செய்வதாக வருவாய் கோட்டாட்சியர் மதியழகன் உத்தரவிட்டார்.