சிக்கல் நகரை தலைமையாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அறிவிக்ககோரி போராட்டம்


சிக்கல் நகரை தலைமையாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அறிவிக்ககோரி போராட்டம்
x

சிக்கல் நகரை தலைமையாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அறிவிக்ககோரி போராட்டம்

ராமநாதபுரம்

சாயல்குடி

சாயல்குடி அருகே சிக்கல் நகரை தலைமையாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அறிவிக்ககோரி சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழுவின் சார்பில் மனிதச்சங்கிலி மற்றும் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றியமாக்க...

கடந்த 2012-ம் ஆண்டு சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ் சிக்கல் நகரை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்று அப்போதைய முதல்-அமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார். 2021-ம் ஆண்டில் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் சிக்கல் நகரை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இதுதொடர் கலெக்டரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.

சிக்கல் பகுதியைச் சுற்றி 30 ஊராட்சிகள் உள்ளன, 12 ஊராட்சி ஒன்றிய வார்டுகள் உள்ளன. 5 காவல் நிலையங்கள் உள்ளன, தமிழக அரசின் உப்பு நிறுவனமும், தனியார் உப்பு நிறுவனங்களும் உள்ளன. சோலார் மின் உற்பத்தி நிறுவனங்கள் அமைந்துள்ளன. சிக்கல், ஏர்வாடி, மேலச்செல்வனூர் ஆகிய ஊர்களைக் கொண்ட இப்பகுதியில் விவசாயம் முக்கிய இடமாக உள்ளது.

தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, கூட்டுறவு வங்கிகள், அரசு உயர்நிலைப்பள்ளியும், 4 அரசு மேல்நிலைப்பள்ளி, மேம்படுத்தப்பட்ட சுகாதார மையம், சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையங்கள், தீயணைப்பு நிலையம் உள்ளன. சிக்கல் அருகே ஏர்வாடி தர்கா, வாலிநோக்கம் கப்பல் உடைக்கும் தளம். பவளப்பாறை தீவுகள். மன்னார் வளைகுடா சுற்றுலா தலங்கள் மற்றும் கீழ செல்வனூர், மேல செல்வனூர் பகுதிகளில் சரணாலயம் உள்ளடக்கிய பகுதியாகும். இவ்வளவு சிறப்புகளை கொண்ட சிக்கல் நகரை மையப்படுத்தி ஊராட்சி ஒன்றியம் அறிவிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இக்குழுவின் கோரிக்கைகளை கேட்டுக்கொண்ட கலெக்டர் ஆய்வுகள் மற்றும் அறிக்கைகளின் அடிப்படையில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என தெரிவித்தார். அதன் பின் மாவட்ட கூடுதல் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

மனிதச்சங்கிலி போராட்டம்

60 கிராம ஊராட்சிகளை கொண்ட கடலாடி ஒன்றியத்தைப் பிரித்து நிர்வாக வசதிகளுக்காக சிக்கல் தலைமையிடமாக ஊராட்சி ஒன்றியம் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்படும் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இந்தநிலையில் சிக்கலை புதிய ஊராட்சி ஒன்றியமாக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி சிக்கல் பகுதியில் கடைகளை அடைத்து மனிதச் சங்கிலி போராட்டம் நேற்று நடைபெற்றது.

சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழுவின் சார்பாக நடைபெற்ற போராட்டத்தில் சிக்கல் ஒன்றிய மேம்பாட்டு குழு உறுப்பினர்கள், அனைத்து கட்சி பிரமுகர்கள், சிக்கல் அனைத்து வணிகர் சங்கத்தினர், சிக்கல் சுற்றுப்பகுதி ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.


Next Story