தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு


தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு
x
தினத்தந்தி 7 Jun 2023 12:30 AM IST (Updated: 7 Jun 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

கோயம்புத்தூர்

கோவை

மாநகராட்சி பள்ளிகள் சுகாதாரமாக உள்ளதா? என்பதை தலைமை ஆசிரியர்கள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று ஆணையாளர் பிரதாப் அறிவுறுத்தி உள்ளார்.

பள்ளிகள் திறப்பு தள்ளிவைப்பு

கோடை விடுமுறைக்கு பிறகு 7-ந் தேதி (இன்று) ஒன்று முதல் பிளஸ்-2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது. இந்தநிலையில் அக்னிநட்சத்திரம் நிறைவடைந்ததும் கோடை வெயிலின் உக்கிரம் குறைந்துவிடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெயிலின் கோரதாண்டவம் இன்னும் குறைந்தபாடில்லை. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால் பகல் நேரங்களில் வீடுகளில் இருக்க முடியாத அளவுக்கு வெப்பம் அதிகளவு இருந்து வருகிறது.

கொளுத்தும் வெயிலை பெரியவர்களே சமாளிக்க முடியாமல் அவதிப்படும் நிலையில் சிறு குழந்தைகள் எப்படி? சமாளிப்பார்கள். இதனால் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து 1 முதல் 5-ம் வகுப்பு வரை வருகிற 14-ந் தேதி திறப்பது என்றும், 6 முதல் பிளஸ்-2 வரை 12-ந் தேதி திறக்கப்படும் என்றும் அறிவிப்பட்டது.

அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

தொடர்ந்து பள்ளிகள் ஒரு மாதத்துக்கும் மேலாக பூட்டி கிடப்பதால் பள்ளியை சுத்தப்படுத்தி பள்ளிகள் திறக்கும்போது மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்திட நடவடிக்கை எடுத்து பள்ளிகளின் சுத்தம், சுகாதாரத்தை ஆய்வு செய்ய கோவை மாநகராட்சி புது முயற்சியை மேற்கொண்டு உள்ளது. அதன்படி கோவை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளில் பணியாற்றும் தலைமை ஆசிரியர்கள் அவர்கள் பணியாற்றும் பள்ளிகளை தவிர பிற பள்ளிகளை ஆய்வு செய்து அதில் உள்ள குறை நிறைகளை அறிக்கையாக தயாரித்து சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையாளர் பிரதாப் கூறியதாவது:-

கோவை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் 17 மேல்நிலைப்பள்ளிகளும், 11 உயர்நிலைப்பள்ளிகளும், 16 நடுநிலைப்பள்ளிகளும், 40 தொடக்கப்பள்ளிகளும் என மொத்தம் 84 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 6 முதல் பிளஸ்-2 வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு வருகிற 12-ந் தேதியும், ஒன்று முதல் 5 வரை உள்ள வகுப்புகளுக்கு 14-ந் தேதியன்றும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. இதற்காக பள்ளிகளை சுத்தமாக வைத்து இருக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிகளின் சுத்தம் ஆய்வு

மேலும் பள்ளிகள் சுகாதாரமாக வைக்கப்பட்டு உள்ளதா? என்பதை கண்காணிக்க தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில் இடம் பெற்ற தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர் தங்களின் பள்ளி இன்றி பிற பள்ளிகளை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இதற்காக தலைமை ஆசிரியர்களுக்கு பிற பள்ளிகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆய்வுப்பணியானது வருகிற 8 மற்றும் 9-ந் தேதிகளில் நடக்கிறது.

இந்த ஆய்வின்போது பள்ளிகளின் கழிப்பறை, வகுப்பறை, குடிநீர் தொட்டிகள், பள்ளி வளாகம், சுற்றுச்சுவர், பள்ளி அருகே செல்லும் சாக்கடை கால்வாய் சுத்தமாக உள்ளதா? மாணவ-மாணவிகளுக்கு நோய் பரப்பும் வகையில் ஏதேனும் உள்ளதா? என்று ஆய்வு செய்ய வேண்டும். பள்ளியின் மரக்கிளை கீழே விழும் வகையில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளை ஆய்வு செய்த பின்னர் அந்த ஆய்வு அறிக்கையை தலைமை ஆசிரியர்கள் மாநகராட்சி கல்வி அலுவலருக்கு சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கை சரியாக உள்ளதா? என்பதை மாநகராட்சி கல்வி அலுவலர் மரியசெல்வம் தலைமையிலான சிறப்பு குழு ஆய்வு செய்யும். அந்த ஆய்வின்போது பள்ளிகளின் சுத்தத்தில் குறைபாடு இருந்தால் அறிக்கை சமர்ப்பித்த தலைமை ஆசிரியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story