ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும் சுகாதார நிலையம்
ஆனைமலையில் ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
ஆனைமலை
ஆனைமலையில் ஒரு செவிலியர் மட்டுமே பணியாற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கூடுதல் பணியாளர்களை நியமிக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
சுகாதார நிலையம்
ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை, காளியாபுரம், டாப்சிலிப் உள்பட 7 இடங்களில் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் 32 துணை சுகாதார நிலையங்கள் உள்ளன. ஆனால் போதுமான எண்ணிக்கையில் செவிலியர்களும், டாக்டர்களும் பணியில் இல்லை.
குறிப்பாக ஆனைமலையில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு செவிலியர் மட்டுமே பணியில் உள்ளார். அவருக்கும் 8 மணி வேலை என்பதால் காலை 8 மணி முதல் மாலை 5 வரை மட்டுமே ஆரம்ப சுகாதார நிலையம் இயங்குகிறது. இதனால் ஆனைமலை பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
மாலை 5 மணிக்கு மேல்...
இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
எங்கள் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து செவிலியர்கள், டாக்டர்கள் பணியிட மாற்றம் பெற்று செல்கின்றனர். ஆனால் அவர்களுக்கு மாற்றாக யாரும் பணிக்கு வருவதில்லை. இதனால் மாலை 5 மணிக்கு மேல் சிகிச்சை பெற முடியாத சூழல் உருவாகி உள்ளது.
கடந்த 3 ஆண்டுக்கு முன்பு வரை பிரசவ விடுதியில் இரவில் கூட செவிலியர் பணியாற்றி வந்தார். தற்போது அந்த பணியிடமும் காலியாக உள்ளது.
புதிய மருத்துவமனை
ஆனைமலை தாலுகாவாக அறிவிக்கப்பட்டு 3 ஆண்டுகள் கடந்தாலும், எந்தவொரு வளர்ச்சி பணிகளும் நடைபெறவில்லை. மருத்து தேவைக்காக 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள வேட்டைக்காரன்புதூர் அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. எனவே கூடுதல் மருத்துவ பணியாளர்களை நியமிக்கவோ அல்லது ஆனைமலையில் புதிய மருத்துவமனை தொடங்கவோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.