சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்


சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும்
x
தினத்தந்தி 13 Oct 2023 6:45 PM GMT (Updated: 13 Oct 2023 6:47 PM GMT)

மழைக்காலம் தொடங்க உள்ளதால் சாக்கோட்டை பகுதியில் சுகாதார பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சிவகங்கை

காரைக்குடி

யூனியன் கூட்டம்

காரைக்குடி அருகே சாக்கோட்டை யூனியன் கவுன்சிலர்கள் கூட்டம் யூனியன் தலைவர் சரண்யாசெந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. யூனியன் ஆணையாளர் சாந்தி முன்னிலை வகித்தார். யூனியன் துணை தலைவர் கார்த்திக் வரவேற்றார். கூட்டத்தில் யூனியன் அலுவலர்கள், கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர். கூட்டத்தில் நடைபெற்ற விவாதம் வருமாறு:- சொக்கலிங்கம் (தி.மு.க கவுன்சிலர்):- கடந்த முறை நடைபெற்ற 2 கூட்டத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்துகொள்ளவில்லை. இதனால் மக்களின் பிரச்சினைகளை தெரிவிக்க முடியாத நிலை உள்ளது. தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள சுடுகாட்டிற்கு செல்ல பாலம் கட்ட வேண்டும்.

சாந்தி(ஆணையாளர்):- தேவகோட்டை ரஸ்தா பகுதியில் பாலம் கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு பொதுப்பணித்துறை அனுமதிக்காக காத்திருக்கிறோம். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி நிமித்தமாக கடந்த கூட்டங்களில் பங்கேற்க முடியவில்லை.

தீர்மானங்கள் நிறைவேற்றம்

சுப்பிரமணியன் (அ.தி.மு.க, கவுன்சிலர்):- தற்போது மழைக்காலம் தொடங்கி உள்ளதால் அனைத்து பகுதியிலும் சுகாதார நடவடிக்கை பணி மந்தமாக உள்ளது. எனவே நோய் தடுப்பு பணியை விரைவுப்படுத்த வேண்டும். ஆணையாளர்:- யூனியனுக்குட்பட்ட பகுதியில் தூய்மைப்பணி அனைத்து இடங்களிலும் நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக தனி வாட்ஸ்-அப் குழு தொடங்கப்பட்டு அதன் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தேவிமீனாள் (அ.தி.மு.க கவுன்சிலர்):- 15-வது நிதிக்குழுவை தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது. இதனால் அனைத்து வார்டு பகுதியிலும் மக்கள் பணிகளை செய்ய முடியாத நிலை உள்ளது. ஆணையாளர்:- நமது யூனியனில் மட்டுமல்லாமல் தமிழகம் முழுவதும் இந்த பிரச்சினை உள்ளது. விரைவில் மாவட்ட கலெக்டர் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.

சரண்யாசெந்தில்நாதன் (யூனியன் தலைவர்):- சாக்கோட்டை யூனினுக்குட்பட்ட அனைத்து பகுதியிலும் மக்கள் பணிகள் முறையாக நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக நடைபெறும். இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது. பின்னர் கூட்டத்தில் நடைபெற்ற தீர்மானங்கள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டது.


Next Story