கடற்கரையில் ஒதுங்கி கிடக்கும் சங்கு, சிப்பி குவியல்கள்
கடல் நீரோட்டம் மாறுபாட்டால் உச்சிப்புளி அருகே அரியமான் முதல் ஆற்றங்கரை வரையிலான கடற்கரை பகுதியில் சங்கு, சிப்பிகள் கரை ஒதுங்கி கிடக்கின்றன.
பனைக்குளம்,
கடல்வாழ் உயிரினங்கள்
ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் இயற்கையாகவே பல அரிய வகையான சங்கு, சிப்பிகள், தட்டு சிப்பி, கோபுர சிப்பி, வரி சிப்பி என பல வகையான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அதிலும் குறிப்பாக மன்னார் வளைகுடா தீவுகளை சுற்றி உள்ள கடல் பகுதியில் தான் சங்கு மற்றும் சிப்பி உள்ளிட்ட பல அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் அதிக அளவில் வாழ்ந்து வருகின்றன.
அதுபோல் பாக்ஜல சந்தி மற்றும் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இயற்கையாகவே கடலுக்குள் பல வகையான சங்கு, சிப்பி போன்ற உயிரினங்கள் உள்ளதால் அதை சுற்றி ஏராளமான மீன்களும் வாழ்ந்து வருகின்றன.
கரை ஒதுங்கிய சிப்பிகள்
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடந்த சில வருடங்களாகவே ஏற்பட்டுள்ள கடல் நீரோட்ட மாறுபாடு காரணமாக கடலில் அடியில் உள்ள பல வகையான சங்கு, சிப்பி உயிரினங்கள் கடற்கரை பகுதிகளில் கரை ஒதுங்கி அழிந்து வரும் நிலை அதிகமாக உள்ளது. இதனிடையே ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள அரியமான் கடற்கரை முதல் பிரப்பன்வலசை, ஆற்றங்கரை கடற்கரை வரையிலான கடல் பகுதியில் ஏராளமான சங்கு, சிப்பிகள் சோவி போன்றவை கடற்கரை ஒட்டிய பகுதியில் குவியல் குவியலாக கிடக்கின்றன.
இவ்வாறு கடற்கரையில் கிடக்கும் சங்கு மற்றும் சிப்பி, சோவிகளை அங்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆச்சரியத்துடன் பார்த்தும் அதை சேகரித்தும் தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கடலில் உள்ள இந்த சங்கு, சிப்பி, சோவிகள் தான் பல கடைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் அலங்காரத்துக்காக தொங்க விடப்படுகின்றன.