இதய தின விழிப்புணர்வு பேரணி
கள்ளக்குறிச்சியில் இதய தின விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கள்ளக்குறிச்சி,
கள்ளக்குறிச்சி மந்தவௌியில் உலக இதய தினத்தை முன்னிட்டு இந்திய மருத்துவ சங்கம், இந்திலி டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனம், கள்ளக்குறிச்சி ராஜி மருத்துவமனை சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்திய மருத்துவ சங்க கள்ளக்குறிச்சி கிளை தலைவரும், டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் மகுடமுடி, ராஜீவ் மருத்துவமனையின் இருதய சிகிச்சை நிபுணர் பாபுசக்கரவர்த்தி, மருத்துவ சங்க செயலாளர் சுரேஷ்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முன்னதாக அவர் கூறுகையில், 30 ஆண்டுகளுக்கு முன் வயதானவர்களின் நோயாக கருதப்பட்ட மாரடைப்பு தற்போது இளம் வயதினரையும் பாதிக்கிறது. இதய நோயான மாரடைப்பு வருவதற்கு புகைப்பழக்கம், புகையிலை பயன்படுத்துதல், மது பழக்கங்கள், அதிகமான மன அழுத்தம், உடலுக்கு ஒவ்வாத உணவு வகைகளை எடுத்துக்கொள்ளுதல், சர்க்கரை நோயின் அளவை கட்டுப்பாட்டுக்குள் வைக்காமல் இருப்பது மற்றும் உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை முறை ஆகிய பழக்க வழக்க காரணங்களால் ஏற்படுகிறது. எனவே மாரடைப்பை தடுப்பதற்கு மன அழுத்தம் இல்லாமல் மன நிலையை சம நிலையில் வைத்திருக்க வேண்டும். போதை பொருட்கள் பயன்படுத்துவதை அனைவரும் தவிர்க்க வேண்டும் என்றார். பேரணியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று வந்தது. இதில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர்நேரு, டாக்டர்கள் பழமலை, ஹரிகிருஷ்ணன், நாவுக்கரசு, ராஜு மருத்துவமனை டாக்டர் இந்துபாலா, டாக்டர் ஆர்.கே.எஸ்.கல்லூரி செயலாளர் கோவிந்தராஜ், கல்லூரி முதல்வர் மோகனசுந்தர், துணை முதல்வர் ஜான்விக்டர் மற்றும் என்.சி.சி., என்.எஸ்.எஸ். மற்றும் டாக்டர் ஆர்.கே.எஸ்.இன்ஸ்டிடியுட் ஹெல்த் ஆப் சயின்ஸ் மற்றும் கிராம செவிலியர் படிக்கும் மாணவ, மாணவிகள், ராஜி மருத்துவமனை பணியாளர்கள், அரசு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.