மருத்துவமனையில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இருதய அறுவை சிகிச்சை தொடங்கியது
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சென்னை,
சென்னை அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள அமைச்சர் செந்தில்பாலாஜி வசிக்கும் அரசு இல்லத்தில் கடந்த 13-ந் தேதி காலை 7 மணி முதல் அதிரடி சோதனை மேற்கொண்ட அமலாக்கத்துறையினர் கடந்த 14-ந் தேதி அதிகாலை 2 மணி அளவில் அவரை கைது செய்தனர். அவரை அமலாக்கத்துறையினர் காரில் ஏற்றி சென்றபோது அவர் நெஞ்சுவலியால் துடித்தார்.
உடனடியாக அவர் சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு சிறப்பு ஆஸ்பத்திரியின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோ கிராம் பரிசோதனையில் அவரது ரத்தக்குழாய்களில் 3 அடைப்பு இருப்பது தெரியவந்தது. உடனடியாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் தெரிவித்தனர்.
அதைத்தொடர்ந்து உயர் சிகிச்சைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜியை சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்து அனுமதி பெற்று கடந்த 15-ந் தேதி அங்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு இருதயநோய் சிறப்பு டாக்டர்கள் குழு தீவிர சிகிச்சை அளித்து வருந்தது. இந்த டாக்டர்கள் குழு செந்தில் பாலாஜிக்கான அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது.
இந்நிலையில் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மருத்துவர் ரகுராமன் தலைமையிலான மருத்துவக்குழு அவருக்கு சிகிச்சை செய்து வருகின்றனர். மருத்துவமனையின் 7-வது தளத்தில் ஸ்கை-வியூ என்ற அறையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. இரண்டு முதல் நான்கு மணி நேரம் இந்த அறுவை சிகிச்சை நடைபெறும் என்று கூறப்படுகிறது.
முன்னதாக அறுவை சிகிச்சைக்கு முன்பு அளிக்கப்படும் அனஸ்தீசியா எனப்படும் மயக்க மருந்து வழங்கப்பட்டது. தொடர்ந்து மயக்கவியல் துறை மூத்த மருத்துவர்கள் குழு செந்தில் பாலாஜியின் உடல்நிலை குறித்து கண்காணித்து வந்தனர்.
அமலாக்கத்துறையின் காவல் முடிய 3 நாட்கள் உள்ளநிலையில் தற்போது செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அறுவை சிகிச்சைக்குப் பின் 3 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவிலும், 7 நாட்கள் மருத்துவ கண்காணிப்பிலும் இருப்பார் என கூறப்படுகிறது.
இதனிடையே செந்தில் பாலாஜியை தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்த அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.