வாகனம் மோதி இறந்த தீயணைப்பு வீரர் பற்றி உருக்கமான தகவல்கள்


வாகனம் மோதி இறந்த தீயணைப்பு வீரர் பற்றி உருக்கமான தகவல்கள்
x

வாகனம் மோதி இறந்த தீயணைப்பு வீரர் பற்றி உருக்கமான தகவல்கள் வெளியானது.

திருச்சி

துவரங்குறிச்சி:

தீயணைப்பு வீரர்

திருச்சி ஸ்ரீரங்கம் தெப்பக்குளம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(வயது 45). இவர் அதிகாரம் என்ற ஊரில் உள்ள துவரங்குறிச்சி தீயணைப்பு நிலையத்தில் தீயணைப்பு வீரராக பணிபுரிந்து வந்தார். இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் பொருட்கள் வாங்குவதற்காக தனது ஸ்கூட்டரில் தீயணைப்பு நிலையத்தில் இருந்து துவரங்குறிச்சிக்கு சென்றார்.

பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த சக தீயணைப்பு வீரர்கள் அவரை தேடிச் சென்றனர். அப்போது திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் அதிகாரம் அருகே கிருஷ்ணகுமார் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்தார்.

படுகாயத்துடன் கிடந்தார்

இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த தீயணைப்பு வீரர்கள், உடனடியாக அவரை மீட்டு துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிறிது நேரத்தில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் கிருஷ்ணகுமாரின் உடலை பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஸ்கூட்டர் மீது அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் படுகாயமடைந்து உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மீட்பு பணி

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே கிருஷ்ணகுமாரின் உடலை கண்டு அவரது குடும்பத்தினர் மற்றும் சக தீயணைப்பு வீரர்கள் கதறி அழுதது காண்பவர்களையும் கண்கலங்க செய்வதாக இருந்தது.

இதற்கிடையே நேற்று முன்தினம் துவரங்குறிச்சியை அடுத்த செவந்தம்பட்டி பகுதியில் கார்கள் அடுத்தடுத்து மோதிக்கொண்ட சம்பவத்தில் கல்லூரி மாணவிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் கார்களின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் துவரங்குறிச்சி தீயணைப்பு நிலைய வீரர்கள் ஈடுபட்டனர்.

சோகம்

இதில் சக தீயணைப்பு வீரர்களுடன் கிருஷ்ணகுமாரும் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. அப்போது அவர் காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக தன் தோளில் சுமந்து வந்தார். அவர் மீட்பு பணியில் ஈடுபட்ட காட்சிகள், மீட்பு பணி நடந்த இடத்தில் இருந்த பலரது மனக்கண்ணில் தற்போதும் நிழலாடுகிறது.

இதனால் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் தங்களுடன் தோளோடு தோள் நின்று மீட்பு பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் கிருஷ்ணகுமார், இரவில் நடந்த விபத்தில் சிக்கி இறந்த சம்பவம், சக தீயணைப்பு துறை வீரர்களை மட்டுமின்றி அப்பகுதி மக்களிடமும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story