தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதால் கோழிகளுக்கு வெப்ப அயற்சியை குறைக்கலாம்
கோழி தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதன் மூலம் கோழிகளில் வெப்ப அயற்சியை குறைக்கலாம் என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மழைக்கு வாய்ப்பு இல்லை
நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்கள் நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழைக்கு வாய்ப்பு இல்லை. வெப்பநிலையை பொறுத்த வரையில் அதிகபட்சமாக 104 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 71.6 டிகிரியாகவும் இருக்கும். காற்று மணிக்கு 4 கி.மீ.வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து வீசும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக 70 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 20 சதவீதமாகவும் இருக்கும்.
சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் பகல் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், விவசாயிகள் மாடு, ஆடுகளின் பால் உற்பத்தி மற்றும் உடல் எடை குறையாமல் இருப்பதற்கு அடர்தீவனம் மற்றும் பசுந்தீவனம் அளிக்க வேண்டும். தீவன பற்றாக்குறையை ஈடுகட்டும் வகையில் சராசரிக்கும் சற்று அதிகபடியான அடர் தீவனத்தை வெப்பம் குறைவாக உள்ள காலை மற்றும் மாலை வேளைகளில் தண்ணீருடன் கலந்து அளிக்க வேண்டும்.
அதிகாலை மற்றும் மாலை வேளைகளில் சினை ஊசி போடுவதன் மூலம் கறவை மாடுகளில் சினை பிடிப்பதை அதிகரிக்கலாம். கோடை காலங்களில் வெப்ப அயற்சியை குறைக்க கால்நடைகள் குடிக்கும் தண்ணீரில் சமையல் சோடா உப்பு, எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர் சத்துக்களை கலந்து அளிக்கலாம். கோடைகாலத்தில் கோழிகளுக்கு நாள் முழுவதும் அதிக வெப்பம் இல்லாமல் குளிர்ச்சியாக குடிநீர் கிடைக்கும்படி பார்த்து கொள்ள வேண்டும்.
வெப்ப அயற்சி
கோழி தீவனத்தில் சோயா எண்ணெய் சேர்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியை குறைக்கலாம். கோடைகாலங்களில் காலை 11 மணிக்கு முன்பாகவே கோழிகளுக்கு தீவனம் அளித்து, தீவன தட்டினை காலி செய்து விட வேண்டும். தீவனத்தில் தேவையான அளவு எலக்ட்ரோலைட்ஸ் மற்றும் உயிர்சத்துகள் சேர்ப்பதன் மூலம் வெப்ப அயற்சியின் தாக்கம் மற்றும் உற்பத்தி குறைவினை தவிர்க்கலாம். வெப்பம் அதிகமாக இருக்கும் மதிய வேளையில் தண்ணீர் தெளிப்பான்களை பயன்படுத்தி வெப்பத்தின் தாக்கத்தினை குறைக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.