கூடலூர் அருகே பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை -400 வாழைகள் சாய்ந்தன; விவசாயிகள் கவலை


கூடலூர் அருகே பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை -400 வாழைகள் சாய்ந்தன; விவசாயிகள் கவலை
x

கூடலூர் அருகே வீசிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 400 வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

நீலகிரி

கூடலூர்

கூடலூர் அருகே வீசிய சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதில் 400 வாழைகள் சாய்ந்தால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

சூறாவளி காற்று

கூடலூர், பந்தலூர் தாலுகாக்களில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாகற்காய், பஜ்ஜி மிளகாய் உள்ளிட்ட கோடைகாலம் பயிர்களின் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்பார்த்த வருவாய் கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டம் அடைந்துள்ளனர். இதனிடையே சில சமயங்களில் சூறாவளி காற்று வீசி புளியம்பாரா உள்பட சில இடங்களில் வாழைகள் சாய்ந்தன.இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். கூடலூர் தாலுகா பாடந்தொரை பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. அப்போது சுண்ட வயல் பகுதியில் கருணாகரன் உள்பட சில விவசாயிகளின் சுமார் 400 வாழைகள் குலைகளுடன் சாய்ந்து விழுந்தது. இதனால் நஷ்டத்தை சந்தித்து உள்ளதாக விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இழப்பீடு வழங்க வேண்டும்

இதுகுறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறியதாவது:- இந்த ஆண்டில் எதிர்பாராத வகையில் கோடை காலத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பாகற்காய் உள்ளிட்ட கோடை கால பயிர்களின் விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது வாழைத்தார்களுக்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. வாழைகளில் 50 சதவீத விளைச்சலுடன் குலைகள் இருந்த நிலையில் சூறாவளி காற்றில் சரிந்து விட்டது.

காட்டு யானைகளிடம் இருந்து வாழைகளை பாதுகாத்த நிலையில் காலநிலை மாற்றத்தால் சூறாவளி காற்றில் சேதம் ஏற்பட்டு பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். இதனால் வாங்கிய கடனை அடைக்க முடியாத நிலை உள்ளது. எனவே சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு தொகை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.


Next Story