சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது அதிகளவு ஒலி மாசுபாடு - மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல்
பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர்.
சென்னை,
தமிழகத்தில் நேற்று தீபாவளி பண்டிகை பட்டாசுகள் வெடித்து கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பட்டாசு வெடிக்க அரசு தரப்பில் நேரம் ஒதுக்கப்பட்டபோதும், அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து நள்ளிரவு வரை பொது மக்கள் பட்டாசு வெடித்தனர். வெடிக்கப்பட்ட பட்டாசுகள் எதிரொலியாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. குறிப்பாக சென்னையில் காற்று மாசு அளவு வழக்கத்தைவிட மோசமாக உள்ளது.
அதிகபட்சமாக மணலியில் காற்று தரக்குறியீடு 316 ஆகவும், வேளச்சேரியில் 301ஆகவும், அரும்பாக்கத்தில் 260ஆகவும், ஆலந்தூரில் 256ஆகவும், ராயபுரத்தில் 227ஆகவும் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சென்னையில் தீபாவளி பண்டிகையின்போது காற்று மாசு ஏற்பட்டதைப் போலவே, அதிகளவு ஒலி மாசுபாடும் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவாக, அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 83.6 dB(A) அளவு பதிவாகியுள்ளது. (பகல் நேரங்களில் 65.0 dB(A), இரவு நேரங்களில் 55.0 dB(A) ஒலி அளவு நிர்ணயிக்கப்பட்டது)