கோவை ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
கோவை
மத்திய அரசின் அக்னிபத் திட்டத்திற்கு இளைஞர்கள் இடையே எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து கோவை ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
புதிய திட்டம் அறிமுகம்
மத்திய அரசு அக்னிபத் எனும் ராணுவத்திற்கு ஆள் சேர்க்கும் புதிய திட்டத்தை அறிவித்து உள்ளது. இந்த திட்டத்தின் படி 17.5 வயது முதல் 23 வயது வரை உள்ள இளைஞர்களுக்கு ராணுவத்தில் 4 ஆண்டுகள் வேலை வாய்ப்பு வழங்கப்படும். இவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. அதே நேரத்தில் சம்பளமாக மாதம் ரூ.30 ஆயிரம் முதல் ரூ.40 ஆயிரம் வரை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த திட்டத்திற்கு இளைஞர்கள் இடையே கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
குறிப்பாக பீகார், உத்தரபிரதேசம் உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த திட்டத்தை ரத்து செய்யக்கோரி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே பீகாரில் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. தொடர்ந்து தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களிலும் ரெயில் பெட்டிகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் தொடர்ந்தால் வட மாநிலங்களுக்கு செல்லும் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.
பலத்த போலீஸ் பாதுகாப்பு
தமிழக இளைஞர்களும் இந்த புதிய திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஒரு சில மாவட்டங்களில் மத்திய அரசை கண்டித்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதையடுத்து கோவை, வடகோவை, போத்தனூர் உள்ளிட்ட ரெயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோவை ரெயில் நிலையத்தில் ரெயில்வே சிறப்பு பாதுகாப்பு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கோவை மாவட்டத்தில் பீகார், ஜார்க்கண்ட், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் அதிகளவு வசித்து வருகின்றனர். எனவே அவர்கள் யாரேனும் போராட்டத்தில் ஈடுபடலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர். இதையடுத்து கோவையில் வசித்து வரும் வட மாநில இளைஞர்களை உளவுத்துறை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இதேபோல் அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் அமைப்புகளையும் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.