விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு


விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
x

அக்னிபத் திட்டத்திற்கு எதிராக போராட்டங்கள் வலுத்து வருவதால் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

விழுப்புரம்

விழுப்புரம்

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு

ராணுவத்துக்கு ஆள் சேர்க்க அக்னிபத் என்ற புதிய திட்டத்தை கடந்த 14-ந் தேதி மத்திய அரசு அறிவித்தது. 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுகிறார்கள் என்பதால் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கு வன்முறை சம்பவங்கள் நடந்து வருகிறது. தமிழகத்திலும் சில முக்கிய ரெயில் நிலையங்களில் தண்டவாளத்தில் அமர்ந்து இளைஞர்கள் போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

ரெயில் நிலையத்தில் பாதுகாப்பு

இந்த நிலையில் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் ரெயில்வே சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் தெற்கு ரெயில்வேக்குட்பட்ட அனைத்து ரெயில் நிலையங்களிலும் போலீஸ் பாதுகாப்பை பலப்படுத்தும்படி தெற்கு ரெயில்வே உத்தரவிட்டுள்ளது. அதன் அடிப்படையில் விழுப்புரம் ரெயில் நிலையத்தில் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அருண்குமார், சப்-இன்ஸ்பெக்டர் அசோகன், ரெயில்வே பாதுகாப்பு படை சப்-இன்ஸ்பெக்டர்கள் பிலோமின்ராஜ், ராமர் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிர கண்காணிப்பு

இவர்கள் ரெயில் நிலைய நுழைவுவாயில் மற்றும் வெளிப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் நிலையத்திற்குள் செல்லும் பயணிகள் யாரேனும் எளிதில் தீப்பற்றக்கூடிய பொருட்களை கொண்டு செல்கின்றனரா? என்று தீவிரமாக சோதனை செய்த பின்னரே உள்ளே செல்ல அனுமதித்து வருகின்றனர்.

அதுபோல் ரெயில் நிலையத்தில் உள்ள நடைமேடைகளில் ரோந்து சுற்றி வருவதோடு ரெயில் நிலையத்துக்குள் வந்து செல்லும் அனைத்து ரெயில்களின் பெட்டிகளிலும் சோதனை செய்து சந்தேக நபர்களின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வருகின்றனர். இது தவிர ரெயில் நிலைய யார்டு, சிக்னலுக்காக ரெயில்கள் நிறுத்தப்படும் முக்கிய இடங்களிலும் போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story