தேனியில் பலத்த மழை
தேனியில் இன்று மாலை பலத்த மழை பெய்தது.
தேனி நகரில் நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் தேனியில் கருமேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக உருவெடுத்தது.
கொட்டித்தீர்த்த மழையால் தேனி நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. இந்த மழையால் பள்ளி முடித்து வீடு திரும்பிய மாணவ-மாணவிகள் நனைந்து கொண்டே சென்றனர். அல்லிநகரம் பகுதியில் மழைநீர், அப்பகுதிகளில் உள்ள வடிகால்களின் வழியாக பெருக்கெடுத்து சின்னக்குளம் கண்மாய் பகுதிக்கு வந்தது. அங்கு கால்வாயில் ஏற்பட்ட அடைப்பால் சாக்கடை நீரும், மழைநீரும் வீரப்ப அய்யனார் கோவில் செல்லும் சாலையில் பெருக்கெடுத்து ஓடியது.
மேலும் குப்பைகள், மதுபாட்டில்கள் போன்றவையும் மழைநீரில் அடித்து வரப்பட்டு சாலையில் குவிந்தது. இதனால் வாகன ஓட்டிகள், பாதசாரிகள் அவதியடைந்தனர். இருப்பினும் இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.