பழனி, செம்பட்டி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை; பஸ்நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது


பழனி, செம்பட்டி பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை; பஸ்நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது
x

பழனி, செம்பட்டி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையினால் பஸ்நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது. 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

திண்டுக்கல்

பழனி, செம்பட்டி பகுதியில் கொட்டித்தீர்த்த மழையினால் பஸ்நிலையத்தை தண்ணீர் சூழ்ந்தது. 3 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

பஸ்நிலையத்தை சூழ்ந்த தண்ணீர்

செம்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் இன்று பகல் நேரத்தில் வெயில் வாட்டி வதைத்தது. இந்தநிலையில் மாலை 4 மணி அளவில் வானில் கருமேகங்கள் திரண்டு மழை வருவதற்கான அறிகுறிகள் தென்பட்டன. சிறிது நேரத்தில் கனமழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் செம்பட்டியில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

அதன்படி செம்பட்டி பஸ் நிலையத்தில் மழைநீர் சூழ்ந்து குளம்போல் மாறியது. இதனால் பயணிகள் அவதியடைந்தனர். மேலும் செம்பட்டியில் உள்ள ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தின் நுழைவு வாயில் பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியது. இதனால் அலுவலகத்தில் இருந்த அலுவலர்கள் வெளியே செல்ல முடியாமல் சிரமப்பட்டனர். பள்ளி முடிந்து வீட்டுக்கு சென்ற மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தபடி சென்றனர்.

ஆத்தூர், சித்தையன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சாய்ந்து விழுந்த மின்கம்பங்கள்

இதேபோல் பழனி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக பகலில் சுட்டெரிக்கும் வெயிலும், மாலை மற்றும் இரவில் அவ்வப்போது சாரல் மழையும் பெய்து வருகிறது.

அதன்படி இன்றும் பழனி பகுதியில் காலை முதலே கடும் வெயில் வாட்டிய நிலையில், மாலையில் திடீரென வானில் மேகக்கூட்டம் திரண்டு மழை பெய்ய தொடங்கியது. பழனியை அடுத்த ஆயக்குடி, கணக்கன்பட்டி, பச்சளநாயக்கன்பட்டி, கோம்பைபட்டியில் காற்றுடன் கனமழை கொட்டித்தீர்த்தது.

பச்சளநாயக்கன்பட்டியில் காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல், திண்டுக்கல் சாலையோரத்தில் இருந்த 3 மின்கம்பங்கள் அடுத்தடுத்து சாய்ந்தன. இதில் ஒரு மின்கம்பம் விழுந்ததில் முறிந்தது. மற்றொரு மின்கம்பம் மரத்தின் மீது சாய்ந்தது.

நல்ல வேளையாக அந்த பகுதியில் குடியிருப்பு மற்றும் ஆட்கள் ஏதும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதுகுறித்து மின்வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மின்வாரிய பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த பகுதிக்கான மின்வினியோகத்தை நிறுத்தி சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story