சிவகங்கை மாவட்டத்தில் கனமழை
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருப்புவனத்தில் 117 மி.மீ. பதிவானது.
திருப்புவனம்,
சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகபட்சமாக திருப்புவனத்தில் 117 மி.மீ. பதிவானது.
கனமழை
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்நிலையில் கடந்த 2 நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வந்தது. நேற்று முன்தினம் சிவகங்கை, காரைக்குடி, திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், தேவகோட்டை, சிங்கம்புணரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. சில இடங்களில் விடிய விடிய மழை பெய்தது. குறிப்பாக திருப்புவனம், சிங்கம்புணரியில் பலத்த மழை பெய்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் குளம்போல தேங்கி நின்றது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
அதிகபட்சமாக 117 மி.மீ. பதிவு
இந்த பலத்த மழையால் குடிநீர் கிணறுகள், விவசாய கிணறுகளில் நீர்மட்டம் உயர வாய்ப்புள்ளது. நேற்று முன்தினம் பெய்த கனத்த மழையால் வெயிலின் வெப்பத் தாக்கம் குறைந்துள்ளது. குளிர்ச்சியான சூழ்நிலை காலை வரை நிலவியது. மழை பெய்து கொண்டிருக்கும்போதே அடிக்கடி மின்சாரம் தடைபட்டது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சிவகங்கை-85, மானாமதுரை-51, இளையான்குடி-15, திருப்புவனம்-117, தேவகோட்டை-16.06, காரைக்குடி-22, திருப்பத்தூர்-108, காளையார்கோவில்-33.06, சிங்கம்புணரி-102.08.