கொடைக்கானலில் காற்றுடன் மழை; மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்


கொடைக்கானலில் காற்றுடன் மழை; மலைப்பாதையில் வேரோடு சாய்ந்த மரம்
x
தினத்தந்தி 4 Jun 2023 2:30 AM IST (Updated: 4 Jun 2023 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொடைக்கானலில் காற்றுடன் மழை பெய்த நிலையில், மலைப்பாதையில் வேரோடு மரம் சாய்ந்தது.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் நிலவும் குளு, குளு சீசனை அனுபவிக்க நேற்று அதிகாலை முதல் ஏராளமான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இதன் காரணமாக, பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.

கொடைக்கானலில் பகல் முழுவதும் வெப்பம் நிலவிய நிலையில், பிற்பகல் முதல் இதயத்தை வருடும் இதமான வானிலை நிலவியது. மாலை 5.30 மணி முதல் இடி, மின்னலுடன் கூடிய லேசான சாரல் மழை பெய்தது. பெருமாள்மலை, மச்சூர் உள்ளிட்ட இடங்களில் மழையுடன் பலத்த காற்றும் வீசியது. இதில் வத்தலக்குண்டு மலைப்பாதையில், குருசடி என்ற இடத்தில் மரம் வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறத்திலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு வந்த வனத்துறையினர் மரத்தை வெட்டி அகற்றினர். அதன்பிறகு மலைப்பாதையில் போக்குவரத்து சீரானது. மழையை தொடர்ந்து இரவு நேரத்தில் குளிர்ச்சியான சூழல் நிலவியதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Related Tags :
Next Story