சங்கராபுரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை மரம் முறிந்து விழுந்ததில் பஸ் கண்ணாடி சேதம்


சங்கராபுரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை மரம் முறிந்து விழுந்ததில் பஸ் கண்ணாடி சேதம்
x
தினத்தந்தி 18 May 2023 6:45 PM GMT (Updated: 18 May 2023 6:46 PM GMT)

சங்கராபுரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மரம் முறிந்து விழுந்ததில் பஸ் கண்ணாடி சேதமடைந்தது.

கள்ளக்குறிச்சி

சங்கராபுரம்,

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கோடை வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்து வருகிறது. அனல் காற்றும் வீசுவதால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை வெயில் சுட்டெரித்தது.

இந்த நிலையில் இரவில் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. இரவு 8.15 மணியளவில் இடி-மின்னல் காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக பெய்தது. சுமார் ½ மணி நேரம் பெய்த இந்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. திடீர் மழையால் வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

பஸ் கண்ணாடி உடைந்தது

இந்த நிலையில் சங்கராபுரம் பஸ் நிலையத்தில் இருந்து நேற்று இரவு 8 மணியளவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருக்கோவிலூர் நோக்கி தனியார் பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. சங்கராபுரம் அடுத்த அ.பாண்டலம் ஏரிக்கரை அருகே சென்று கொண்டிருந்த போது, காற்றுக்கு ஈடுகொடுக்க முடியாமல் சாலையோரம் இருந்த மரம் ஒன்று முறிந்து பஸ் கண்ணாடி மீது விழுந்தது. இதில் பஸ்சின் முன்புற கண்ணாடி முற்றிலும் உடைந்து சேதமானது. அதிர்ஷ்டவசமாக பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுபற்றி தகவல் அறிந்த சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜா மற்றும் போலீசார், அங்கு விரைந்து வந்து பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் மரத்தை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதேபோல் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் காற்றுடன் பெய்த மழையால், வடபொன்பரப்பி, புதூர் ஏரிக்கரை சாலையில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதுபற்றி அறிந்த நெடுஞ்சாலைத்துறையினர் அங்கு வந்து மரங்களை அப்புறப்படுத்தினர்.


Next Story