கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய மழை; அருவிகளில் வெள்ளப்பெருக்கு
கொடைக்கானலில் வெளுத்து வாங்கிய மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
கொடைக்கானல் மலைப்பகுதியில் நேற்று காலையில் லேசான வெப்பம் நிலவிய நிலையில், மதியம் 1 மணி முதல் லேசான சாரல் மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு 2 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நகரின் சில இடங்களில் மிதமான மழையும், பல்வேறு இடங்களில் கனமழையும் கொட்டி தீர்த்தது. வெளுத்து வாங்கிய இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பொதுமக்கள், சுற்றுலா பயணிகள், கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் பலர், சுற்றுலா இடங்களை காண முடியாமல் அறைகளிலேயே முடங்கினர். நட்சத்திர ஏரியில் படகுகளை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
கொடைக்கானல் வனப்பகுதியில் உள்ள அனைத்து அருவிகள், நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. குறிப்பாக கொடைக்கானலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதேபோல் நட்சத்திர ஏரி நிரம்பி, உபரி நீர் அதிக அளவில் வெளியேறியது. இதேபோல் அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. இதனிடையே மேல்மலை பகுதியில் பல்வேறு இடங்களில் மரக்கிளைகள் முறிந்து விழுந்தது. மேலும் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.