கொடைக்கானலில் 4 மணி நேரம் பெய்த கனமழை - சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு...!


கொடைக்கானலில் 4 மணி நேரம் பெய்த கனமழை - சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு...!
x

கொடைக்கானல் பகுதியில் காற்றுடன் பெய்த மழையின் காரணமாக வத்தலகுண்டு சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இன்று பிற்பகல் ஒரு மணி முதல் மாலை 5 மணி வரை விட்டு விட்டு சாரல் மழையும் பலத்த மழையும் பெய்தது. அத்துடன் காற்றும் வீசியது.

இதன் காரணமாக வத்தலகுண்டு சாலையில் மயிலாடும்பாறை என்ற இடத்தின் அருகே பெரிய மரம் ஒன்று வேரோடு சாய்ந்து சாலையில் விழுந்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து தடை ஏற்பட்டது.

இதனையடுத்து வனத்துறையினர், நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் மரங்களை வெட்டி அகற்றினர்.

இதனால் இரண்டு மணி நேரத்திற்கு பின்னர் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது. வார விடுமுறை தினம் ஆனதால் இருபுறமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்து நின்றன. மரம் அகற்றப்பட்ட உடன் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் மலைப்பகுதிகளில் பேரிடர் மீட்பு படையை அமைக்க வேண்டுமென பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story