1 மணிநேரம் கனமழை


1 மணிநேரம் கனமழை
x

கும்பகோணத்தில் 1 மணிநேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் 1 மணிநேரம் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

குளிர்ந்த காற்று

கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தியது. ஆனாலும் அடிக்கடி மழை பெய்து வெப்பத்தை தணித்து வந்தது. இந்தநிலையில் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. கும்பகோணத்தில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் திடீரென குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. சிறிதுநேரத்தில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது.

1 மணிநேரம் கனமழை

தொடர்ந்து இடி- மின்னலுடன் கனமழை பெய்தது. இதனால் மோதிலால் தெரு, காமராஜர் சாலை, மகாமககுளம் 4 கரைகள், அரசு பெண்கள் கல்லூரி செல்லும் சாலை, ரெயில் நிலையம் செல்லும் சாலை உள்ளிட்ட சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கியது. கழிவுநீர் வடிகால்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவுநீர் வடிகால் நிரம்பி சாலைகளில் கழிவுநீர் மழைநீருடன் கலந்து ஓடியது. பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மழையில் நனைந்தவாறும், குடைபிடித்தும் சென்றனர். இந்த மழை 1 மணிநேரத்திற்கு மேல் நீடித்தது. இந்த மழையினால் பூமி நனைந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. தற்போது சம்பா சாகுபடி பணிகள் நடந்து வருவதால் இந்த மழை சம்பா சாகுபடி விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Related Tags :
Next Story