1 மணி நேரம் கனமழை


1 மணி நேரம் கனமழை
x

பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்

பேராவூரணி, அதிராம்பட்டினத்தில் 1 மணிநேரம் கனமழை பெய்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பலத்த மழை

பேராவூரணியில் கடந்த சில மாதங்களாகவே வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இந்தநிலையில் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை நீடித்தது. அப்போது பள்ளி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவ- மாணவிகள், வேலைக்குச்சென்று வரும் ஊழியர்கள் மழையில் நனைந்தபடி சென்றனர். 1 மணி நேரம் பெய்த மழையினால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

விவசாயிகள் மகிழ்ச்சி

இந்த மழையால் பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ந்த நிலை ஏற்பட்டது. பேராவூரணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த இந்த மழை நெல் மற்றும் தென்னை சாகுபடிக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

அதிராம்பட்டினம்

அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை வெயில் வாட்டி வதைத்தது. மாலை 6 மணி அளவில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு குளிர்ச்சியான சூழல் நிலவியது. அதனை தொடர்ந்து ராஜாமடம், மகிழாங்கோட்டை, கருங்குளம், கரிசைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் திடீரென இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழை காரணமாக தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி நின்றது. கிழக்கு கடற்கரைச்சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமப்பட்டனர்.

இந்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பட்டுக்கோட்டை

பட்டுக்கோட்டையில் நேற்று மாலை 5.45 மணிக்கு இடி- மின்னலுடன் தொடங்கிய பலத்த மழை இரவு 8 மணி வரை நீடித்தது. இதனால் சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த சூழ்நிலை காணப்பட்டது.


Next Story