ஒரு மணி நேரம் பலத்த மழை-வாகன போக்குவரத்து பாதிப்பு
வேலூரில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வேலூரில் ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பலத்த மழை
வேலூரில் கடந்த சில நாட்களாக கோடையை மிஞ்சும் அளவுக்குவெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். நேற்றும் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்தது. 101.7 டிகிரியாக வெயில் அளவு பதிவானது.
இந்த நிலையில் மாலை 6 மணி அளவில் வானத்தில் கருமேகங்கள் திரண்டன. பின்னர் திடீரென மழை பெய்யத்தொடங்கியது.
இந்த மழை சுமார் 1 மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது. பலர் மழையில் நனைந்தபடி சென்றனர். பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியது.
போக்குவரத்து பாதிப்பு
மழை நின்ற பின்னர் பல்வேறு இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. காட்பாடியில் இருந்து வேலூர் வரும் சாலையில் பாலாற்று பாலம் முதல் கிரீன் சர்க்கிள் வரை வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன. வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றன.
இதேபோல வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகேயும் திடீரென வாகன நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கிருந்த போக்குவரத்து போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இந்த நெரிசல் அரை மணிநேரத்துக்கும் மேலாக நீடித்தது.
வேலூரை அடுத்த பெருமுகையில் தேசிய நெடுஞ்சாலையில் உயர்மட்டமேம்பாலம் அமைக்கப்படுவதால் சர்வீஸ் சாலையிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சர்வீஸ் சாலை குண்டும், குழியுமாக காணப்பட்டதால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகினர். உயர்மட்ட மேம்பால பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழையால் பல்வேறு இடங்களில் திடீர் மின்தடை ஏற்பட்டது. இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வள்ளிமலை
வள்ளிமலை பகுதியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெப்பத்தால் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். குறிப்பாக விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டு மழை இல்லாமல் பயிர் காய்ந்து போகும் நிலையில் உள்ள கவலையுடன் இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மாலை இடி, மின்னலுடன் பலத்த பெய்தது. மழையினால் வேர்க்கடலை மற்றும் கரும்பு. கத்தரி வெண்டை விவசாயிகள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தாழ்வாக உள்ள விவசாய நிலங்களில் நேற்று மாலை பெய்த மழையினால் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது அத்துடன் சாலை ஓரங்களிலும் மழைநீர் தேங்கியது.
இந்த மழையினால் பொன்னை. வள்ளிமலை. மேல்பாடி பகுதியில் உள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் அவ்வப்போது மின்சாரம் தடை பட்டிருந்தது. சில இடங்களில் அறுவடைக்கு நெற்பயிர்கள் தயாராக இருந்த வயல்களில் தண்ணீர் தேங்கியது விவசாயிகளை வேதனையடைய செய்துள்ளது.