சாத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் பலத்த மழை
சாத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.
வத்திராயிருப்பு,
சாத்தூர், வத்திராயிருப்பு பகுதியில் நேற்று பலத்த மழை பெய்தது.
பலத்த மழை
வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கான்சாபுரம், கூமாபட்டி, பிளவக்கல் அணை, கிழவன்கோவில், பட்டுப்பூச்சி, நெடுங்குளம், கொடிக்குளம், சேதுநாராயணபுரம், மகாராஜபுரம், தம்பிபட்டி, கோட்டையூர், இலந்தைகுளம், சுந்தரபாண்டியம் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் கரு மேகங்கள் சூழ்ந்து சாரல் மழையாக பெய்யத் தொடங்கியது. இந்த சாரல் மழை சில நிமிடங்களில் பலத்த மழையாக பெய்து தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளப்பெருக்காக ஓடியது.
கனமழையால் பொதுமக்கள் தங்களின் அன்றாட பணிகளை செய்வதில் மிகுந்த சிரமம் அடைந்து வருகின்றனர். மேலும் தீபாவளிக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில் பொதுமக்கள் புத்தாடைகள் மற்றும் இதர அடிப்படை பொருள்களை வாங்க தொடர் மழையினால் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள தாழ்வான பகுதிகளில் தேங்கும் மழை நீரை உடனடியாக அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சாத்தூர்
சாத்தூரில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. நேற்று மதியம் 1.30 மணிக்கு சாத்தூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்ய தொடங்கியது இந்த மழை 3.15 மணி வரை நீடித்தது. இதனால் சாத்தூரில் முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. பஸ் நிலையம் முழுவதும் மழைநீர் மேலும் கிராமப்புறங்களில் சாலையின் ஓரங்களில் உள்ள நீர்வரத்து ஓடைகள் முழுவதும் மழை நீர் நிரம்பி வழிந்தன. மேட்டமலை, கோணம்பட்டி, பெத்தரெத்துபட்டி, சின்னஓடைப்பட்டி, சங்கராபுரம், சுப்புலாபுரம், நள்ளி, புல்வாய்ப்பட்டி, குமாரபுரம், இருக்கன்குடி, எம்.நாகலாபுரம், கலிங்கமேட்டுப்பட்டி, சிறுக்குளம், வீரார்பட்டி, ரெங்கப்பநாயக்கன்பட்டி, சங்கரநத்தம் ஆகிய பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையினால் இரண்டாவது முறை விதைத்த விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்பகுதியில் உள்ள சிறு குளங்கள், கண்மாய்கள் நிறைந்தன. சாத்தூர் நகர் பகுதியில் 1.30 மணி நேரம் பெய்த பலத்த மழையினால் மரியன் ஊருணி கண்மாய் நிறைந்து மறுகால் பாய்ந்தது. சாத்தூரில் 55 மி.மீ. அளவு மழை பெய்தது. பலத்த இடி, மின்னலுடன் பெய்த மழையினால் சாத்தூர் நகர் பகுதி மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கிராமங்களில் மின்சாரம் தடை செய்யப்பட்டது.