தஞ்சை மாவட்டத்தில் விடிய, விடிய மழை


தஞ்சை மாவட்டத்தில் விடிய, விடிய மழை
x

தஞ்சை மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக அதிராம்பட்டினம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் உளுந்து, எள் சாகுபடி பாதிக்கப்பட்டது.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்;

தஞ்சை மாவட்டத்தில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது. குறிப்பாக அதிராம்பட்டினம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் கொட்டித்தீர்த்தது. இந்த மழையினால் உளுந்து, எள் சாகுபடி பாதிக்கப்பட்டது.

கோடை வெயில்

தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கியது முதல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அதிலும் குறிப்பாக 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தி வருகிறது. இந்த வெயிலினால் மக்கள் வெளியில் நடமாட முடியாத நிலை காணப்படுகிறது. இதனால் பகல் நேரங்களில் சாலைகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகிறது.இந்த நிலையில் அவ்வப்போது மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டாலும் லேசான தூறலுடன் மழை பெய்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை முதல் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. மாலை நேரத்தில் மழை பெய்வதற்கான அறிகுறிகள் காணப்பட்டன. இந்தநிலையில், நேற்று முன்தினம் இரவு தொடங்கி நேற்று காலை வரை மாவட்டம் முழுவதும் பரவலாக விடிய விடிய மழை பெய்தது.

கொட்டித்தீர்த்தது

குறிப்பாக அதிராம்பட்டினம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதிகளில் மழை கொட்டித்தீர்த்தது. இதில் அதிராம்பட்டினம் பகுதியில் அதிக பட்சமாக 15 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை பெய்தது. இதனால் எங்கு பார்த்தாலும் மழைவெள்ளமாக காட்சி அளித்தது. இதே போல் பூதலூர், திருக்காட்டுப்பள்ளி பகுதியிலும் 10 செ.மீட்டருக்கும் அதிகமாக மழை கொட்டித்தீர்த்தது.அதே போல் மழையின் காரணமாக தஞ்சாவூர் - ரெட்டிப்பாளையம் சாலையில் மழை நீர் தேங்கி நின்றது. மழை நீர் வடிய வழியில்லாததால் சாலை குளம் போல் காட்சியளித்தது. பின்னர் நேற்று பிற்பகலுக்கு பிறகு மழைநீரை பொக்லின் எந்திரம் மூலம் வடிகால் ஏற்படுத்தி வடியவைத்தனர்.தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் சித்திரை பட்டத்தில் உளுந்து, எள் ஆகியவற்றை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்த மழையினால் இளம் பயிராக உள்ள உளுந்து, எள் பயிர்கள் மழையினால் பாதிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் நகரசபை தலைவர் வீடு இடிந்தது

தஞ்சையில் பெய்த மழையின் காரணமாக வடக்கு வீதியில் உள்ள முன்னாள் நகர்மன்றத் தலைவர் சுல்தான் என்பவரது பழமையான வீடு இடிந்து சேதமானது. இந்த பகுதியில் மழைநீர்வடிகால் பணிக்காக தோண்டப்பட்டு பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில் இதன் அருகே இருந்த வீடு இடிந்துள்ளது. இதே போல் இந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் அச்சத்துடனே உள்ளனர். எனவே மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருக்காட்டுப்பள்ளி

திருக்காட்டுப்பள்ளி பூதலூர் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தொடர்ந்து சில வாரங்களாக கடுமையான வெயிலால் அவதிப்பட்ட மக்களுக்கு இந்த மழை மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது. மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வயல்களில் மழை நீர் தேங்கி நின்றது. இந்த மழை கோடை உழவு செய்ய ஏற்றதாக இருக்கும் என்றும், காவிரி கரையோர கிராமங்களில் ஆழ்துளை கிணறுகள் மூலம் கோடை நெல் சாகுபடி பணிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர.வெண்ணாறு, கொள்ளிடம், காவிரி ஆறுகளில் மழை தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.

மழை அளவு

தஞ்சை மாவட்டத்தில் நேற்று காலை 7 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

அதிராம்பட்டினம் 153, திருக்காட்டுப்பள்ளியில் 127, பூதலூர் 114, மதுக்கூர் 90, பட்டுக்கோட்டை 83, கல்லணை 73, வெட்டிக்காடு 66, ஒரத்தநாடு 64, திருவையாறு 53, கும்பகோணம் 45, ஈச்சன்விடுதி 45, அணைக்கரை 44, தஞ்சை 41, அய்யம்பேட்டை 37, பேராவூரணி 33, பாபநாசம் 34, வல்லம் 32, நெய்வாசல் தென்பாதி 27, திருவிடைமருதூர் 18, குருங்குளம் 16.


Next Story