கோவையில் பலத்த மழை


கோவையில் பலத்த மழை
x

கோவையில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோயம்புத்தூர்


கோவையில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

பொதுமக்கள் எதிர்பார்ப்பு

கோவையில் தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும் எதிர்பார்த்த அளவுக்கு பெய்யவில்லை. சில இடங்களில் மழையும், சில இடங்களில் அவ்வப்போது லேசான சாரலும் பெய்து வந்தது. போதிய மழை பெய்யாததால் குளங்கள் வறண்டதுடன், ஆறு, வாய்க்கால்கள் உள்ளிட்ட நீர்நிலைகளும் வறண்டன.

எனவே மழை பெய்யாதா என்று விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல வெயில் அடித்தது. ஆனாலும் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது. இந்த நிலையில் சரவணம்பட்டி, காளப்பட்டி, கோவில்பாளையம் மற்றும் அதை சுற்றி உள்ள சில பகுதிகளில் காலை 11 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது.

பலத்த மழை

தொடர்ந்து பிற்பகல் 1 மணியளவில் கோவை மாநகர பகுதி மற்றும் வடவள்ளி, துடியலூர், கணபதி உள்ளிட்ட பல இடங்களில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலையோரத்தில் மழைநீர் ஆறாக ஓடியது. தொடர்ந்து கோவை மாநகர பகுதியில் மழை பெய்து கொண்டே இருந்தது. இதன் காரணமாக இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மழையின் நனைந்தபடி சென்றனர். மேலும் பள்ளிகளுக்கு சென்று திரும்பிய மாணவ-மாணவிகளில் பலர் நனைந்தபடி வீடு திரும்பினார்கள். மாணவர்களின் பெற்றோர் சிலர் குடைகளுடன் பள்ளிகளுக்கு சென்று அவர்களை அழைத்துச்சென்றனர். தொடர்ந்து மழை தூறியபடி இருந்ததால் மாலை நேரத்தில் வேலை முடிந்து வீடு திரும்பியவர்களும் மழையில் நனைந்தபடி சென்றனர்.

பொதுமக்கள் மகிழ்ச்சி

இந்த மழை காரணமாக கோவையில் நிலவி வந்த வெப்பம் தணிந்து இரவில் குளிர்ந்த காற்று வீசியது. அதுபோன்று மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story