கோவையில் பலத்த மழை


கோவையில் பலத்த மழை
x
தினத்தந்தி 1 May 2023 12:15 AM IST (Updated: 1 May 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் நேற்று பெய்த பலத்த மழையின் காரணமாக சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

சுட்டெரித்த வெயில்

கோவையில் கடந்த 2 மாதங்களாக கோடை வெயில் சுட்டெரித்தது. இதனால் கோவையில் அதிகபட்சமாக 101.3 டிகிரி வெப்பநிலை பதிவானது. இதனால் நகரில் அனல்காற்று வீசியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கோவையில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு பெய்த மழை காரணமாக பெரியநாயக்கன்பாளையத்தில் 20-க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் 50-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. கோவையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கோடை வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காலநிலை நிலவுகிறது.

சாலையில் வெள்ளப்பெருக்கு

இந்த நிலையில் நேற்று மதியம் கோவை காந்திபுரம், ராமநாதபுரம் உக்கடம், ரேஸ்கோர்ஸ், இடையர்பாளையம், கவுண்டம்பாளையம், வெள்ளக்கிணறு, துடியலூர், சாய்பாபா காலனி, வடவள்ளி, கணுவாய் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. சிறு தூறலுடன் ஆரம்பித்த மழை சிறிது நேரத்தில் பலத்த மழையாக உருவெடுத்தது.

இந்த மழையால் கோவை-அவினாசி ரோடு, ரெயில் நிலையம் சாலை, பூமார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

மகிழ்ச்சி

லங்கா கார்னர், கிக்கானி பள்ளி அருகே உள்ள ரெயில்வே சுரங்கப்பாதை உள்ளிட்ட தாழ்வான பல இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது.

திடீரென பெய்த மழையால் இருசக்கர வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடி சென்றதை காணமுடிந்தது. மேலும் கோவையை குளிர்வித்த இந்த மழையில் சிறுவர்கள் உற்சாகத்துடன் நனைந்த விளையாடினர். வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கோவையில் மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

மழையளவு

நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கோவையில் பெய்த மழை அளவு விபரம் (மில்லி மீட்டரில்) :-

அன்னூர்-12.2, மேட்டுப்பாளையம்-77.5, சிங்கோனா-6, சின்னக்கால்லாறு-2, வால்பாறை பி.ஏ.பி.-40, வால்பாறை தாலுகா-39, சோலையாறு-9, சூலூர்-1, பொள்ளாச்சி-2, கோவை தெற்கு-3, விமான நிலையம்-3.6, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்-16.4, பெரியநாயக்கன்பாளையம்-80.2, பில்லூர் அணை-85, தொண்டாமுத்தூர்-20, சிறுவாணி அடிவாரம்-8, மதுக்கரை தாலுகா-23, மாக்கினாம்பட்டி-3, கிணத்துகடவு தாலுகா-2, ஆனைமலை தாலுகா-6.


Next Story