கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை
கொடைக்கானலில் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நிலவி வருகிறது. இதனால் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். இதற்கிடையே கடந்த சில நாட்களாக மழையும் பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று காலை வானத்தில் கருமேக கூட்டங்கள் சூழ்ந்து காணப்பட்ட நிலையில் பகலில் சுமார் 1 மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்தது. மேலும் மாலையில் சாரல் மழையும் பெய்தது. இந்த மழை காரணமாக ஏரிச்சாலையில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள சிறு கடைகளின் முன்பு தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தேங்கிய நின்ற மழைநீரில் ஊர்ந்து சென்றன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் நட்சத்திர ஏரி மீண்டும் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. மேலும் நேற்று பெய்த கனமழை காரணமாக வெள்ளி நீர்வீழ்ச்சி, பாம்பார் அருவி, வட்டக்கானல் அருவி, பியர் சோலார் உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் அரசு ஆஸ்பத்திரி அருகே நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிக்காக கொட்டப்பட்ட மண் மழைநீரில் அடித்து வரப்பட்டதால் வத்தலக்குண்டு சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. தொடர் மழையால் சுற்றுலா பயணிகள் சுற்றுலா இடங்களை கண்டு களிக்க முடியாமல் பரிதவித்து வருகின்றனர். இருப்பினும் காலை முதல் பகல் வரை இதமான சீதோஷ்ண நிலை நிலவுவதால் அதனை அனுபவித்து மகிழ்கின்றனர்.