கரூர் மாவட்டத்தில் பலத்த மழை
கரூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்ததால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கனமழை
தமிழகத்தில் வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி காரணமாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தவகையில் கரூரில் நேற்று வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது. இந்நிலையில் இரவு சுமார் 8.30 மணியளவில் திடீரென மழை பெய்ய ஆரம்பித்தது.
இந்தமழையானது கரூர், தாந்தோன்றிமலை, காந்திகிராமம், பசுபதிபாளையம், வெங்கமேடு உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 45 நிமிடத்திற்கு மேலாக பெய்தது. இந்த திடீர் மழையால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் நனைந்து கொண்டே சென்றனர். இந்த மழையால் கரூர் மற்றும் அதன்சுற்றுவட்டார பகுதிகளில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
அரவக்குறிச்சி
அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி ஆண்டிபட்டிக்கோட்டை, கணவாய் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் நேற்று காலையில் இருந்து மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்தநிலையில் மாலை 5.30 மணி முதல் இரவு 7 மணி வரை கனமழை பெய்தது. அதன் பிறகு மழை தூரிக்கொண்டே இருந்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம்போல் ஓடியது. இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
நொய்யல்-வேலாயுதம்பாளையம்
நொய்யல், தவிட்டுப்பாளையம், நன்செய் புகழூர், கட்டிப்பாளையம், நத்தமேடுப்பாளையம், திருக்காடுதுறை, பாலத்துறை பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 9.30 மணிக்கு மேல் கனமழை ெபய்தது. இதனால் இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், தரைக்கடைகாரர்கள் பாதிப்படைந்தனர். கிராமப்புறங்களில் பயிர் செய்துள்ள பல்வேறு வகையான பயிர்கள் கன மழையின் காரணமாக செழித்து வளரும் நிலை ஏற்பட்டுள்ளது.
வேலாயுதம்பாளையம், கந்தம்பாளையம், மூலிமங்கலம், காகிதபுரம், புதுகுறுக்கு பாளையம், செக்குமேடு, மூர்த்திபாளையம், புகழூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 9 மணி முதல் 9.30 மணி வரை பலத்த மழை கொட்டி தீர்த்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி நின்றன.
இதேபோல் கரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேற்று இரவு பலத்த மழை பெய்தது.