கீரமங்கலத்தில் கன மழை
கீரமங்கலத்தில் கன மழை பெய்தது.
கீரமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் மதியம் கீரமங்கலத்தை சுற்றியுள்ள சில கிராமங்களில் மிதமான மழை பெய்தது. இரவில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. கனமழையால் தெருக்களிலும், சாலைகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்தநிலையில் ஏரி, குளங்களுக்கு செல்லும் வரத்து வாரிகள், கால்வாய்கள் ஆக்கிரமிப்புகளாலும், பராமரிப்பு இல்லாததாலும் தடைப்பட்டு உள்ளதால் குளங்களுக்கு தண்ணீர் செல்ல முடியாமல் ஆங்காங்கே தேங்கியிருந்தது.
கீரமங்கலம் வடக்கு அறிவொளி நகர் குருவிக்காரர்கள் காலனியில் உள்ள பொது சுகாதார வளாகத்திற்கு கூடுதல் கழிவுநீர் தொட்டி கட்டும் பணி நடந்து கொண்டிருக்கும் நிலையில் மழைத்தண்ணீர் நிரம்பி கழிவறை தொட்டி சுவர் உடைந்து சாய்ந்தது. மேலும் கீரமங்கலம் பகுதியில் உள்ள வருவாய்த்துறை அலுவலக கட்டிடங்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.