திண்டுக்கல், கொடைக்கானலில் பலத்த மழை; மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு


தினத்தந்தி 19 Sep 2023 9:15 PM GMT (Updated: 19 Sep 2023 9:16 PM GMT)

திண்டுக்கல்லில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. கொடைக்கானல் மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திண்டுக்கல்

திண்டுக்கல்லில் பலத்த மழை கொட்டித்தீர்த்தது. கொடைக்கானல் மலைப்பாதையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கொட்டித்தீர்த்த மழை

தென்மேற்கு பருவமழை காலம் என்று சொல்ல முடியாத அளவுக்கு, கோடையை மிஞ்சும் வகையில் திண்டுக்கல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெயில் சுட்டெரித்தது. ஆனால் கடந்த சில வாரங்களாக திண்டுக்கல் மாவட்டத்தில் அவ்வப்போது மழை பெய்து மண்ணையும், மக்களையும் குளிர்ச்சிப்படுத்தியது.

இந்தநிலையில் நேற்று காலையில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. மதியம் 3 மணிக்கு மேல் வானத்தில் கருமேக கூட்டங்கள் வானத்தை ஆக்கிரமித்தன. அதன்பிறகு 3½ மணி அளவில் சாரல் மழை பெய்தது. சிறிது நேரத்தில் அது கனமழையாக மாறியது.

இந்த மழை சுமார் ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்தது. இதைத்தொடர்ந்து சிறிது நேரம் விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. இதனால் திண்டுக்கல்லில் நாகல்நகர், சிலுவத்தூர் சாலை, தாடிக்கொம்பு ரோடு, நேருஜிநகர், என்.ஜி.ஓ.காலனி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது.

குளம் போல் தேங்கிய தண்ணீர்

திண்டுக்கல் விவேகானந்தா நகர் பகுதியில் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், பாதாள சாக்கடையுடன் கலந்து ஆறாக ஓடியது. இதேபோல் நகரின் முக்கிய சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியதால் கார்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள் மிகவும் சிரமப்பட்டனர்.

மழை காரணமாக பஸ் நிலையம் அருகே உள்ள கலெக்டர் முகாம் அலுவலக பகுதியில் சாலையோரத்தில் இருந்த மரக்கிளை முறிந்து அங்கு நிறுத்தப்பட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மீது விழுந்தது. இதில் மோட்டார் சைக்கிள் சேதமடைந்தது. சம்பவம் குறித்து தகவலறிந்த மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் விரைந்து வந்து மரக்கிளையை வெட்டி அகற்றினர்.

தீப்பற்றிய மின்கம்பம்

இதேபோல் கொடைரோடு, அம்மையநாயக்கனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மெட்டூர், காமலாபுரம், ஊத்துப்பட்டி, பள்ளப்பட்டி, மாலையகவுண்டன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை 3 மணிக்கு மேல் பலத்த மழை பெய்தது. சுமார் 1½ மணி நேரம் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல் தேங்கியது. சாலைகள், தெருக்களில் மழைநீர் வெள்ளமென கரைபுரண்டு ஓடியது. இதனால் கொடைரோடு பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது.

இதற்கிடையே கொடைரோட்டில் பலத்த மழை பெய்தபோது, அங்குள்ள ஒரு மின்கம்பத்தில் திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனை பார்த்ததும் அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் மின்கம்பத்தில் எரிந்த தீ, மழைநீர் பட்டதும் அணைந்தது.

கொடைக்கானலில் கனமழை

கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 3 தினங்களாக கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. அதன்படி நேற்று காலை 8½ மணி நிலவரப்படி அப்சர்வேட்டரி பகுதியில் 57.5 மில்லி மீட்டர் மழையும், பிரையண்ட் பூங்காவில் 46.8 மில்லி மீட்டர் மழையும் செய்துள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை லேசான வெப்பம் நிலவிய நிலையில், மதியம் 1 மணி அளவில், லேசாக மழை பெய்ய தொடங்கியது. அதன்பிறகு 1½ மணி முதல் சுமார் 3 மணி நேரம் கனமழை கொட்டித்தீர்த்தது. இரவு வரை சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. தொடர்மழை எதிரொலியாக கொடைக்கானலில் உள்ள பல்வேறு அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. மேலும் பல இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

மலைப்பாதையில் விழுந்த மரம்

இந்தநிலையில் பூம்பாறை கிராமத்தில் இருந்து பூண்டி செல்லும் மலைப்பாதையில் நேற்று காலை மரம் ஒன்று வேரோடு சாய்ந்து விழுந்தது. இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர், நெடுஞ்சாலை துறையினர் விரைந்து சென்று மரத்தை அகற்றினர். அதன்பிறகே போக்குவரத்து சீரானது.

கல்லூரி மற்றும் பள்ளி முடிந்து வந்த மாணவ-மாணவியர் மழையில் நனைந்தபடியே வீடு திரும்பினர். இதற்கிடையே சுற்றுலாப் பயணிகளின் வருகை நேற்று ஓரளவுக்கு இருந்தது. இருப்பினும் அவர்கள் சுற்றுலா இடங்களை காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

தொடர்மழை காரணமாக கொடைக்கானலில் பகல் நேரத்திலேயே கடும் குளிர் நிலவி வருகிறது. இதனால் சுற்றுலா பயணிகள், உள்ளூர்வாசிகள் குளிருக்கு பாதுகாப்பான உடைகளை அணிந்தபடி நடமாடி வருவது குறிப்பிடத்தக்கது.


Next Story