முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மழை
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் மழை
முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் பகல் நேரத்தில் வெயில் அடித்த நிலையில் இரவு 8.30 மணிக்கு மேல் மிதமான மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை இடைவிடாது நேற்று அதிகாலை சுமார் 4 மணி வரை பெய்து கொண்டே இருந்தது. இந்த பலத்த மழையால் முத்தூர் - நத்தக்காடையூர் சாலை சக்கரபாளையம் பஸ் நிறுத்தம் அருகில் வயல் மூழ்கி தண்ணீர் அதிக அளவில் நிரம்பியது.. இந்த மழை நீர் அருகில் தார்ச்சாலையில் வெளியேறி குளம் போல் தேங்கி நின்றது. இதனால் இவ்வழியே நேற்று காலை சென்ற கனராக, இருசக்கர வாகனங்கள் மழை நீரில் தத்தளித்தபடி சென்றன.
இதன்படி முத்தூர் நகர சுற்றுவட்டார கிராம பகுதிகளில் நேற்று முன்தினம் ஒரே நாளில் மொத்தம் 62 மில்லி மீட்டர் மழை பெய்து பதிவாகி உள்ளது. தொடர்ந்து இப்பகுதிகளில் மாலை, இரவு நேரங்களில் பெய்து வரும் தொடர் மழையால் கிராம பகுதிகளை சேர்ந்த நஞ்சை சம்பா நெல் சாகுபடி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். மேலும் கிணறுகள், ஆழ்குழாய், கிணறுகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்து நகர, கிராம பொது மக்களின் குடிநீர் ஆதாரம் மேம்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது