நெல்லை-அம்பையில் பலத்த மழை
நெல்லை மற்றும் அம்பையில் நேற்று பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி அவ்வப்போது பெய்து வருகிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை காணப்பட்டது. இந்த நிலையில் நேற்று காலை வெயில் அடித்தது. பிற்பகலில் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மதியம் 1.30 மணி அளவில் லேசான மழை பெய்தது. பின்னர் 2.30 மணி அளவில் திடீரென்று பலத்த மழை கொட்டியது. தொடர்ந்து சாரல் மழையாக பெய்து கொண்டிருந்தது. அப்போது சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நெல்லை மாநகரில் தாழ்வான பகுதிகளில் மழை தண்ணீர் தேங்கியது. சந்திப்பு, பாளையங்கோட்டை, டவுன், தச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சாலையோர பள்ளங்களில் தண்ணீர் தேங்கியது. இதேபோல் நெல்லை மாவட்டத்தில் நேற்று பகலில் அம்பை, சேரன்மாதேவி மணிமுத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது. அம்பையில் பலத்த மழை பெய்தது. நெல்லை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- அம்பை -27, சேரன்மாதேவி- 8, மணிமுத்தாறு -1, பாளையங்கோட்டை -26, நெல்லை -20.