பொள்ளாச்சியில் பலத்த மழை
பொள்ளாச்சியில் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பொள்ளாச்சி
பொள்ளாச்சியில் பலத்த மழை பெய்தது. இதனால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
பலத்த மழை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில நாட்களாக கடுமையான வெயில் வாட்டி எடுத்து வந்தது. நேற்று முன்தினம் மாலை லேசான மழை பெய்தது. நேற்று மாலை சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. மரபேட்டை ஓடை அருகில் உள்ள வீட்டின் ஒரு பகுதி, பலத்த மழைக்கு தாக்குப்பிடிக்காமல் இடிந்து விழுந்தது. வீட்டில் அங்கு யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. மேலும் அருகில் உள்ள 20-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர். இதை அறிந்ததும், வருவாய்த்துறையினர் விரைந்து சென்று பாதிப்பு விவரங்களை கேட்டறிந்தனர்.
கால்வாயில் அடைப்பு
இதேபோன்று சின்னாம்பாளையம் பகுதியில் பலத்த மழை காரணமாக கால்வாயில் மழைநீர் செல்ல வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டது. இதனால் ஆர்.எம். நகர் பகுதியில் மழைநீர் வீதியில் குளம் போல் தேங்கி நின்றது.
இது தவிர மழையின் காரணமாக பொள்ளாச்சியில் சுமார் 1 மணி நேரம் மின்தடை ஏற்பட்டதால், அனைத்து தரப்பினரும் கடும் அவதி அடைந்தனர்.